பக்கம்:தந்தை பெரியார் சிந்தனைகள்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சமூகம்பற்றிய சிந்தனைகள்

83



இன்னொரு கவிதை. ஒரு பக்தன் தன் அருகே வந்த நாயை அடித்துத் துரத்தி ஆண்டவனைத் தரிசிக்க ஆலயத்துள் புகுகின்றான். அவனைப் பார்த்துக் கவிஞர் பேசுகின்றார்.[குறிப்பு 1]

.....................
நாயும் கடவுளும்
ஒரே பிரம்மம்தான்
என்பதை அறிவாயா நீ?
வேண்டுமானால்
அந்த இரண்டுக்குமுரிய
ஆங்கிலச் சொல்லின் எழுத்துகளை[குறிப்பு 2]
மாறிப் போட்டுப்பார்.[குறிப்பு 3]

ஆன்மாநுபவம் பெற்ற கைவல்யார்த்திக்கே இரண்டும் ஒன்றாகத் தெரியும். இறையநுபவம் பெற்ற உண்மை பக்தனுக்கு இந்தத் தத்துவ உண்மை கட்டாயம் தட்டுப்படும். வேதாந்த இரகசியம் இது!

இத்தகையவற்றைப் படிக்கும் மக்களிடம் இவை நல்ல மனமாற்றத்தை விளைவித்துள்ளன என்று கருதலாம்.

(3) சாதித்தொழில்: இது நம்நாட்டில் நடைமுறையில் இருப்பது. இதனைக் கடியும் பாங்கில் பெரியாரின் சிந்தனைகள் உருவாகியுள்ளன. அவற்றுள் சிலவற்றைக் காண்போம்!

(i) தொழில்பாகுபாட்டைக் கொண்டே சாதிவகுக்கப்பட்டதே ஒழியப் பிறவியைக் கொண்டு அல்ல என்கின்றனர் ஒரு சிலர்: ஒரு மனிதன் காலையில் தச்சனாகவும், நண்பகலில் வியாபாரியாகவும், இரவில் ஆசிரியனாகவும் மறுநாள் காலையில் உழுவோனாகவும், பகலில் நெய்வோனாகவும், காவல்காரனாகவும், ஏன் இருக்கக் கூடாதென நான் அவர்களைக் கேட்கிறேன்.

தஞ்சைப் பக்கம் நாயுடுமார்களும் பிள்ளைமார்களும் வாணிகம் செய்தால் ‘செட்டியார்’ என்றே வழங்கப்பெறுகின்றனர். என் நண்பர் ஒரு தெலுங்கு பேசும் நாயுடு வகுப்பைச் சேர்ந்தவர். ஒரு சமயம் (1950-60) அவர் எனக்கு ஒரு திருமண அழைப்பு அனுப்பிவைத்தார். அதில் செட்டியார் மகன் ஒருவருக்கு நாயுடு மகள் ஒருத்தியைத் திருமணம் புரிவதாக இருந்தது. நான் கலப்புத் திருமணமா? என்று வினவ, அவர் செய்யும் தொழிலால் ஏற்பட்டது என்று நிலைமையை விளக்கினார்.


  1. மேலது-பக்.23
  2. மேலது-பக்.23
  3. DOG-GOD