பக்கம்:தந்தை பெரியார் சிந்தனைகள்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

88

தந்தை பெரியார் சிந்தனைகள்



அளவுக்குப் போய்விட்டது. இதுவே எனக்குச் சாதி, மதம், கடவுள் என்கிற விஷயங்களில் நல்ல முடிவு ஏற்படும்படிச் செய்துவிட்டது. இதன்காரணமாக எனக்குப் பார்ப்பனீயத்தில் ஒரு வெறுப்பு ஏற்பட்டுவிட்டது.

ஒரு தடவை எங்கள் ஊருக்கு நெருஞ்சிப்பேட்டை சாமியார் (சங்கராச்சாரி போன்றவர்) அவர்களுக்கு எங்கள் ஊர் நகரத்து செட்டியார் வகுப்பு வியாபாரிகள் தடபுடலாய்ப் பிச்சை நடத்துவார்கள். எங்கள் தகப்பனாரும் 50 ரூபாய் கொடுத்தார். அந்தச் சாமியார் தம்பி ஒரு மைனர்; கடன்காரன். அவனும்கூட வந்திருந்தான். ஈரோட்டில் ஒரு வியாபாரிக்கு அவன் வாங்கிய கடன் திருப்பித்தரவேண்டும். அது கோர்ட்டில் டிக்ரி ஆகியிருந்தது. அந்தச் சமயம் வியாபாரி அக்கடனை வசூல் செய்ய என்னிடம் யோசனை கேட்டார். நான் ‘வாரண்டு கொண்டுவா’ என்றேன். மறுநாள் பகல் 12 மணிக்கு வாரண்டு எடுத்துக் கொண்டு சேவகனுடன் அந்த வியாபாரி என்னிடம் வந்தார். நான் அவர்களைக் கூட்டிக்கொண்டு ஈரோட்டில் சாமியார் இறங்கியிருந்த ‘எல்லயர் சத்திரம்’ சென்றேன். உள்ளே சுமார் 200 பேர்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். சாமியார் தம்பியை வரவழைத்தோம். வாரண்டு என்று தெரிந்ததும் ஓடினான். சட்டென்று பார்ப்பனர்கள் உண்டு கொண்டிருந்த வீட்டில் புகுந்து கதவைத் தாளிட்டுக் கொண்டான். நான் தூணைத் தாவிப்பிடித்து வீட்டின்மீது ஏறி, ஓடுகள் உடையப் புறக்கடைப்பக்கம் வீட்டுக்குள் குதித்து சாப்பாடு இருக்கும் இடத்தையும் பார்ப்பனர்கள் சாப்பிடும் இடத்தையும் தாண்டி வந்து, வீதிக்கதவைத் திறந்து சாயுபு சேவகனைக் கூப்பிட்டு, ஓர் அறைக்குள் ஒளிந்து கொண்ட சாமியாரின் தம்பி கையைப் பிடித்து ஒப்புவித்தேன்.

வீட்டுக்குப் போய்ச் சாப்பிட்டுவிட்டுக் கடைக்குச் சென்றேன். நகரத்துச் செட்டியார், குமஸ்தாகள், பார்ப்பனப்பிள்ளைகள் எங்கள் கடைக்கு வந்து எனது தந்தையாரிடம் நடந்ததைச் சொன்னார்கள். “சாப்பாட்டுப் பண்டம் தீட்டுப்பட்டுவிட்டது. 200, 300பேர் பட்டினி. எல்லாம் உங்கள் மகன் ராமுவால்” என்று செய்திகளைச் சொன்னார்கள். நான் நடந்ததைச் சொன்னேன். என் தகப்பனாருக்கு ஏற்பட்ட கோபத்துக்கும், ஆத்திரத்துக்கும் அளவே இல்லை. “அடத். . . மகனே உனக்கென்ன அங்கு வேலை?” என்று ஆத்திரத்தோடு கூறினார். வந்தவர்கள் மேலும் மேலும் சொன்னார்கள்.