பக்கம்:தந்தை பெரியார் சிந்தனைகள்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

94

தந்தை பெரியார் சிந்தனைகள்



அய்யர்கிறித்தவர், அரிசனக் கிறித்தவர் என்றெல்லாம் வேறுபாடுகள் இருப்பதாகவும், இதனால் இந்துமதத்தில் திருமால் பத்து அவதாரங்கள் எடுத்து வந்து திருத்தியது போல் தந்தை பெரியார் பத்து முறை கிறித்துவ அவதாரம் எடுத்துவந்து கிறித்தவ சமூகத்தைத் திருத்தவேண்டும் என்று ஆவேசமாகப் பேசினார்.

(v) மனிதனுக்கு இழிவு சாதியால் தானே வருகிறது? சாதியோ மதத்தினால் உண்டாகிவருகின்றது. மதமோ கடவுளால்தானே உண்டாகி வருகின்றது. இவற்றுள் ஒன்றைவைத்துக் கொண்டு ஒன்றை அழிக்கமுடியுமா? ஒன்றுக்கொன்று எவ்வளவு கட்டுப்பாடும் பந்தமும் உடையதாக உள்ளன என்று யோசித்துப் பாருங்கள்- என்கின்றார் தந்தை.

(vi) நம்நாட்டில் எம்.ஏ. படிக்கிறான்; பி.ஏ. படிக்கிறான்; டாக்டராக இருக்கிறான்; வக்கீலாக இருக்கிறான்; சட்டமன்ற உறுப்பினராக இருக்கின்றான்; முதல் அமைச்சராக இருக்கிறான்; இன்னும் வெங்காயமாக இருக்கின்றானேயொழிய இதில் எவனும் தான் ஏன் இழிமகனாக இருக்கவேண்டுமென்று கருதுவதில்லை என்பதோடு மண்ணையும் (திருமண்) சாம்பலையும் (திருநீறு) நெற்றியில் பூசிக்கொண்டும் கோயிலுக்குப் போய்க் கொண்டும் மேலும் மேலும் தன்னை இழிமகனாக்கிக் கொண்டிருக்கின்றானேயொழிய ஒருவன்கூட தான் ஏன் தாழ்ந்த சாதிக்காரன்? பார்ப்பான் மட்டும் ஏன் உயர்ந்த சாதிக்காரன்? என்று கேட்பதில்லையே!

(vii) மனிதன் மேலும் தெளிவுபெறவேண்டும். ஒருவன் உயர்வு, ஒருவன் தாழ்வு; ஒருவன் காலை ஒருவன் கழுவிக் குடிப்பது என்பது முட்டாள்தனம், அறியாமை. அவனுக்கும் இவனுக்கும் எவனுக்கும் பிறவித் தத்துவத்தில் எவ்விதபேதமும் இல்லை. இருவருக்கும் நெருப்பு சுடத்தான் செய்யும். இருவருக்கும் உப்புகரிக்கத்தான் செய்யும். இருவருக்கும் வேம்பு கசக்கத்ததான் செய்யும். இப்படியிருந்தும், பிறவியின் பெயரால் சாதி வேற்றுமை இருந்துவரக்காரணம் என்ன என்பதை உங்கள் சொந்த புத்தியைக்கொண்டு சிந்தித்துப்பார்க்க வேண்டும்.

(viii) இந்தச் சாதி இழிவிற்குக் காரணம் கடவுள்தான் என்று உங்களுக்குத் தோன்றினால் அந்தக் கடவுளுக்கு முன்னறிவிப்பு (Notice) தாருங்கள். “நாங்கள் தாம் உனக்கும் உன்னைக் குளிப்பாட்டி வரும் உன் அர்ச்சகனுக்கும் அன்றாடம் படி அளந்து வருகிறோம். பாடுபடாத உன்னையும், பாடுபடுகிற எங்களையும் ஏமாற்றுகிற அவனை உயர்சாதியாக்கிவிட்டாய். ஆகவே, ஒன்று இனி மக்களில் உயர்வு தாழ்வு இல்லை என்றாவது