பக்கம்:தந்தை பெரியார் சிந்தனைகள்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமூகம்பற்றிய சிந்தனைகள்

95



கூறு; அல்லது நீயல்ல அதற்குக் காரணம் என்றாவது ஒப்புக் கொண்டு விடு. இந்த அறிவிப்பு விண்ணப்பத்தை அறிந்து இரண்டு வாரத்திற்குள் நீ ஏதாவது ஒரு முடிவான பதில் தெரிவிக்கா விட்டால் உன் கோயிலை இடித்துவிடுவோம்” என்று எச்சரிக்கை செய்யுங்கள். கடவுள் என்று ஒன்று அந்தக் குழவிக் கல்லில் அடைந்திருக்குமானால் அது வாய்திறந்து பேசட்டும். இன்றேல் அதனை உதறித்தள்ளுங்கள்.

இங்ஙனம் தந்தை பெரியாரவர்கள் தம் கருத்தைக் கேட்டோர் மனத்தில் ஆணித்தரமாகப் பதியும்படிப்பேசுவார்கள். அவரிடம் அலங்காரப்பேச்சு இராது. தெளிவான நடையில் தம் சிந்தனைகளை மக்கள் மனத்தில் கொட்டுவார்கள்.

(8) சாதிஒழிப்பு: இது பற்றித் தந்தை பெரியாரவர்கள் ஆழ்ந்து சிந்தித்துள்ளார்கள். அவர்களின் சிந்தனைகள் சிலவற்றை உங்கள் முன் வைக்கின்றேன்.

(i) ஒவ்வொரு சமூகத்தாரும் தங்களுக்கு மேலானவர்கள் இல்லை என்று சொல்லி வருவதுபோல் தங்களுக்குக் கீழானவர்களும் இல்லை என்பதையும் ஒத்துக்கொள்ள வேண்டும்; அப்பொழுதுதான் ஒற்றுமையை நிலைநிறுத்தமுடியும்.

(ii) மனிதனை மனிதன் தொடக்கூடாது; பார்க்கக்கூடாது; தெருவில் நடக்கக்கூடாது என்கின்ற கொள்கையோடு ஒரு மதத்தை இன்னமும் உலகத்தில் வைத்துக் கொண்டிருப்பது அந்த மதமக்களுக்கு மாத்திரமேயல்லாமல் உலகமக்களுக்கே அவமானமாக காரியமாகும்.

(iii) சாதியை ஒழிப்பதற்குப் பல அடிப்படையான முறைகள் உள்ளன. சாதிப்பட்டங்கள் (அய்யர், முதலியார், பிள்ளை, அய்யங்கார், செட்டியார், நாயுடு, நாயக்கர், ரெட்டியார், நாடார் முதலியன) சட்டப்பூர்வமாகத் தடுக்கப்பெற வேண்டும். புதிதாக மணம்புரிவோர் அத்தனைபேரும் கலப்புமணம் செய்யுமாறு தூண்டக்கூடிய சட்டங்கள் இயற்றப்பெறல் வேண்டும். ஒரே வகுப்பில் ஒரே சாதிப்பிரிவில் திருமணம் செய்பவர்களுக்குப் பல கஷ்டமான நிபந்தனைகளையும் சட்டத்திட்டங்களையும் விதித்து அத்தகைய திருமணம் புரிபவர்களுக்குச் சமுதாயத்தில் செல்வாக்கு இல்லாமல் செய்யவேண்டும். சமயங்களைக் குறிக்கும் நெற்றிக்குறி, உடை, சாதியைக் குறிக்கும் பூணூல் சின்னங்களையும் சட்டபூர்வமாகத் தடுக்கவேண்டும். இவ்வாறு செய்தால்தான் சாதிகள் அடியோடு ஒழியும்.

சட்டங்களை இயற்றுவது நடைமுறைக்கு ஒவ்வாது. இன்று கலப்புத்திருமணங்கள் பரவலாக நடைபெறுகின்றன. இது