பக்கம்:தந்தை பெரியார் சிந்தனைகள்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமூகம்பற்றிய சிந்தனைகள்

99



(v) மருத்துவச் சிகிச்சையில் நோய்க்குத்தக்க மருந்தை வயிற்றுக்கு அனுப்பி அங்கு அது செரிமானக்கருவி மூலம் செரிக்கச் செய்து சக்கை மலத்தின் மூலம் கழித்துச் சத்தைக் குருதியோடு கலக்கும்படிச் செய்து நோயை குணமாக்க முயற்சி செய்வதைவிட, மருந்தில் உண்மையான சத்தை எடுத்து நேரே குருதியில் சேர்த்து வேலை செய்யும்படி (ஊசிமூலம் செலுத்தி) செய்வதுபோல ஒழுக்கத்தையே நேரடியாகக் கற்பிப்பதால் என்ன இழப்பு?

(3) மூடநம்பிக்கைகள்: இவற்றைப்பற்றி அதிகமாகச் சிந்தித்தவர் நம் அய்யா அவர்களே.

(i) மூடநம்பிக்கை என்பது ஒரு பெருநோயேயாகும். இதனால் சிலருக்கு மேல்சாதித் தன்மையும், வயிற்றுப் பிழைப்புக்கு வழியும் இருந்து வருவதால், இருகூட்டத்தினரும் தங்கள் சுயநலத்திற்காகவே மக்களை மூடநம்பிக்கையில் ஆழ்த்தி நீண்ட நாட்களாகப் பயன்பெற்று வந்திருக்கவேண்டும்.

(ii) தனது புத்திக்கும் பிரதியட்ச அநுபவத்திற்கும் தோன்றுவதை நம்பாமல் எவனோ ஒருவன் எப்போதோ சொன்னதை நம்பி வாழ்வை நடத்துபவன் மூடன்.

(iii) புதிய சங்கதி எதுவானாலும் காதை மூடிக்கொள்ளவே நமது மக்கள் கற்பிக்கப்பெற்றுள்ளனர். சிறுகுழந்தைப் பருவத்தில் நமக்குப் புகுத்தப் பெற்றவிஷயங்களையே ஆராய்ச்சியின் மூலம் அறிவின்மூலம் கண்ட முடிவு என்று கருதி அதற்குத் தலை கொடுத்துக் கொண்டுள்ளோம்.

(iv) நம் மக்கள் மாறுதலில் அறிவு செலுத்தமுற்பட்டாலும், சமுதாயப் பழக்கவழக்கங்கள் எனப்படுபவைகளில் முட்டுக் கட்டைபோன்று இடையூறுகள் விளைவிக்கப் பெறுகின்றன. நாம் அறிவை, உணர்ச்சியை, ஊக்கத்தை இழந்து ஆயிரமாயிரம் ஆண்டுகளாக ஏமாற்றப்பெற்று மிரட்டப்பெற்று, அடக்கப்பெற்று வந்துள்ளோம்.

(v) கடவுள்: மக்களுக்குள் சிலருக்குப் பேராசையும், பொறாமையும், சோம்பேறித்தனமும் வலுக்க வலுக்க அவற்றிலிருந்து செல்வவானும், அரசனுக்குக் குருவும் ஏற்பட்ட பிறகு அவற்றை நிலைநிறுத்த ஆத்மா கடவுள்[குறிப்பு 1] வேதம், மதம், முனிவர்கள், மகாத்மாக்கள் ஆகியவைகளைக் கற்பித்தும் பிறகு அவைமூலம் கடவுள் செயல், முற்பிறப்பு, பிற்பிறப்பு, கர்மம் (வினை) பாவம், புண்ணியம், மேல் உலகம், கீழ் உலகம்,


  1. சைவம் இதனைப் ‘பதி’ என்றும், வைணவம் ‘ஈசுவரன்’ என்றும் பேசும்.