பக்கம்:தந்தை பெரியார் சிந்தனைகள்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

100

தந்தை பெரியார் சிந்தனைகள்



தீர்ப்புநாள், மோட்சம், நரகம் ஆகியவையும் கற்பிக்க வேண்டியதாய் விட்டன. கடவுள், மதம் இவைபற்றி நேற்றைய பொழிவில் விளக்கப்பெற்றன. விட்டுப்போன சிலவற்றை ஈண்டுக் காட்டுவேன்.

(அ) ஆத்மா: இதுப்பற்றி தந்தை பெரியார் சிந்தனைகளைக் காண்போம்:

(i) ஆத்மா என்பது ஒரு பொருளல்ல; அது சுதந்திரம், அறிவு, உணர்ச்சி முதலியவற்றை உடையதல்ல என்பதோடு அது பெரிதும் பொருள் என்றே நமக்குக் காரணப்பெறுகின்றது.[குறிப்பு 1]

(ii) ஆத்மா என்பது கண்ணுக்குத் தெரியாதது என்றும், உடல், உருவம், குணம் இல்லாதது என்றும் சொல்லப்பெற்றுள்ளதே. உடல் உருவம் இல்லாத ஒன்றுக்கு நாம் பார்ப்பனரிடம் தரும் அரிசி, பருப்பு, செருப்பு, துடப்பம் ஆகியவை எப்படிப் போய்ச் சேரும்? அவற்றை ஆத்மா எப்படி அநுபவிக்க முடியும்.

(iii) இறந்தவர்கட்குத் திதி கொடுக்க வேண்டுமென்றால் இறந்தவர்களின் ஆத்மாவைப்பற்றி மூன்றுவிதமாகச் சொல்லப் பெற்றுள்ளது. (i) இறந்த சீவனின் ஆத்மா மற்றொரு உடலைப் பற்றிக்கொண்டு விடுவதாக, (ii) இறந்த சீவனின் ஆத்மா இறந்தவுடன் பிதிர்லோகத்தை அடைந்து அங்கு இருப்பதாக (பிதிர்லோகத்தில் இல்லாத ஆத்மா எங்கிருக்குமோ?), (iii) இறந்த சீவனின் ஆத்மா அதனதன் செய்கைக்குத்தக்கபடி மோட்சத்திலோ நரகத்திலோ பலன் அநுபவித்துக் கொண்டிருப்பதாக. ஆகவே இந்த மூன்றில் (மூன்று விஷயத்தில்) எது உண்மை? எதனை உத்தேசித்துத் திதி கொடுப்பது?

(iv) மனிதன் மரித்தபிறகு ஆத்மா என்பது ஒன்று பிரிந்து சென்று தண்டனை பெறுகின்றது என்பது பெரும் பித்தலாட்டம். ஆத்மா என்பது பார்ப்பனார்கள் கட்டிவிட்டது. பொதுவாக இந்தச் சொல்லே தமிழ்ச்சொல் அல்ல. ஆத்மா என்பது வடமொழிச்சொல். இதற்குத் தமிழில் சொல்லே இல்லை. அதுமட்டுமல்ல; வேறு மொழியில்கூட ஆத்மா என்பதற்குச் சொல் இல்லை.[குறிப்பு 2] எனவே பார்ப்பனர்களால் ஏற்பட்டதாதலால் வடமொழியில் மட்டும் இச்சொல் உள்ளது.[குறிப்பு 3]


  1. சைவம் இதனைப் ‘பசு’ என்றும் வைணவ தத்துவம் ‘சித்து’ என்றும்கூறும்.
  2. ஆங்கிலத்தில் soul என்பது ஆத்மாவைக் குறிப்பது.
  3. தத்துவங்களை நிறுவியவர்கள் கண்ட சொல் இது. அனைத்தையும் பார்ப்பனர்கள்மீது சுமத்துவது நியாயம் இல்லை.