பக்கம்:தந்தை பெரியார் சிந்தனைகள்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

104

தந்தை பெரியார் சிந்தனைகள்



இலட்சக்கணக்கில்கூட தம்மடமையைத் தாமே காட்டிக் கொள்கிறார்கள். இது மக்களை ஏய்த்துப் பிழைக்கும் கூட்டாத்தாருக்கே இலாபமாகும்.

(iii) முட்டாள்தனமும் மூடநம்பிக்கையும் உள்ள நிகழ்ச்சிகளில் தலைசிறந்தது மகாமகம் என்னும் மதக்கற்பனை விழாவே. நம்மைப் பச்சைக் காட்டுமிராண்டிகளாக அந்நியர் கருதச் செய்யும் விழா. இதுபற்றி இந்துக்களுக்கு மானமோ வெட்கமோ சிறிதும் ஏற்படவில்லையே.

(iv) கார்த்திகை என்கின்றான்; குடம் குடமாகப் பீப்பாய் பீப்பாயாக நெய், வெண்ணெய், எண்ணெய் பாழாகிறது. இலட்சத்தீபம் என்கிறான்; டின் டின்னாக எண்ணெய் பாழாகிறது. அபிஷேகம் என்கிறான்; நெய், எண்ணெய், பால், தயிர், வெண்ணெய் படிப்படியாகச் சலதாரைக்குப் போகிறது. இப்படிப்பட்ட வழக்கமோ பழக்கமோ வேறு எந்த நாட்டிலாவது உள்ளனவோ? நம்நாட்டில்தான் இவை போன்றவற்றிற்குக் கேள்வி கேட்பாரே இல்லை.

சில விழாாக்களைப்பற்றி அய்யா அவர்களின் சிந்தனைகள்.

(1) பொங்கல்:

(i) பொங்கல் நாள் ஒன்றுதான் தமிழர்நாள்; மற்ற பண்டிகைகளெல்லாம் பெரிதும் தமிழருக்கு அவமானம், கேடு. தமிழர்களைக் கொலைசெய்த, செய்யும்நாள்.

(ii) தமிழர்களைக் கொன்று தமிழர்களின் பண்பு, நாகரிகம், கலாச்சாரம், பழக்கவழக்கம் இவற்றைக் கொண்டதாக ஒரு பண்டிகை இருக்குமானால் அதற்குத் தமிழிலேயே பெயர் இருக்கவேண்டும். ஆனால் வடமொழியில் இருக்குமானால் அது எப்படித் தமிழர்க்குண்டான பண்டிகை என்று கூறமுடியும்? பொங்கல் பண்டிகை என்று கூறும் முறையில் அது தமிழ்ப்பெயராக இருப்பதும் அன்றி நம்மக்களுக்கு ஏற்ற பண்டிகையாகவும் உள்ளது.[குறிப்பு 1]

(iii) தமிழர்கள் கொண்டாடும் மற்ற பண்டிகைகட்கு எல்லாம் தமிழனுடையவை என்று சொல்ல ஆதாரம் இல்லை; பார்ப்பானுடையவை என்று கதைகள் எழுதிவைத்துள்ளனர். ஆனால் பொங்கல் பண்டிகைக்கு இப்படி ஒன்றும் கூறவழி இல்லை; என்றாலும் இதற்கும் மற்ற பண்டிகை போலக் கதை கட்டிவிட முனைந்து விட்டார்கள்.


  1. இதற்கும் ‘சங்கராந்தி’ என்றுகூட பெயர்சொல்ல முனைந்துள்ளனர் பார்ப்பனர்.