பக்கம்:தந்தை பெரியார் சிந்தனைகள்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

108

தந்தை பெரியார் சிந்தனைகள்



5. தலைவர்கள்

தலைவர்களின் தகுதிகளைப் பற்றி அய்யா அவர்கள் சிந்தித்துள்ளார்கள். அவர்தம் சிந்தனைகள்.

(1) ஒருதலைவன் வேண்டும், அவன் நடத்துபவனாய் இருக்கவேண்டுமேயொழிய நடத்தப்படுபவனாய் இருக்கக்கூடாது. அடுத்தாற்போல பின்பற்றுபவர்கள் இருக்கவேண்டும். அவர்கள் தலைவர் அபிப்பிராயத்துக்கு உழைக்கிறவர்களாக இருக்கவேண்டும். அதற்குத்தான் ஒத்துழைப்பு என்று பெயர்.

(2) மக்களை நடத்துகிறவன் தலைவனேயொழிய மக்களின் பின்னால் செல்லுகிறவன், மக்களை அடக்க முடியாதவன் தலைவன் அல்லன் தலைவன் ஆகவும் மாட்டான்.[குறிப்பு 1]

(3) தலைவனாக வருபவன் பொதுமக்கள் அத்தனை பேர்களின் விருப்பத்தையும் சம்பாதிக்கவேண்டும் என்று ஆசைப்படக்கூடாது. அது முடியாதகாரியம் என்பதோடு அது தேவையற்றதும் ஆகும். மற்றவர்கள் குறைகூறுகிறார்கள் என்பதற்காக இலட்சியம் செய்யவேண்டியதில்லை. தனக்குச் சரியென்று பட்டதைத் துணிவுடன் செய்ய வேண்டியதே முறையாகும்.

(4) தற்சமயம் நாட்டில் நல்ல தலைவர் பஞ்சம் ஏற்பட்டு வருகிறது. மக்களிடம் நன்மதிப்புப் பெற்ற எந்தத் தலைவனும் இப்பொழுது நாட்டில் இல்லை.

சில தலைவர்களைப்பற்றி அய்யா அவர்கள் கருத்து தெரிவித் துள்ளார்கள். அத்தகைவர்களுள் சிலரை ஈண்டுக்குறிப்பிடுகிறேன்.

(1) அறிஞர் அண்ணா: அறிஞர் அண்ணாவைப் போன்று இது வரையில் நாம் கண்டதில்லை. தூய்மையான நெஞ்சம் கொண்டவர்; ஏழைகள்மீது இரக்கத்துடன் நெஞ்சு நெகிழ்பவர். இவரைப் பற்றிப் பெரியாரின் சிந்தனைகளில் சில.

(i) சுமார் 40 ஆண்டுக்காலமாக தந்தை பெரியார் நடத்திவைத்த ஆயிரக்கணக்கான திருமணங்கள் சட்டப்படி செல்லுபடியற்ற திருமணமாக இருந்தது. அவற்றை எல்லாம் செல்லுபடியாகும்படி சட்டம் நிறைவேற்றிவிட்டார் தம் ஆட்சிக்காலத்தில்.

(ii) வரலாற்றில் சமுதாய சீர்திருத்த வீரர் என்று பொறிக்கப்படுவார் என்பது உறுதி.


  1. இதற்கு இன்று, பலர் எடுத்துக்காட்டுகளாக உள்ளனர். பெயர்கள் குறிப்பிட விரும்பவில்லை. சிந்தித்தால் அறிந்துகொள்ள முடியும்.