பக்கம்:தந்தை பெரியார் சிந்தனைகள்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆனால் மக்களின் வளர்ச்சிப்பற்று ஒன்றுதான் உண்டு-அதுவும் அறிவுக்கும் ஏற்றவகையில்.

மானசீகமாக: தந்தை பெரியார் படத்தைப் பார்த்திருப்பீர்கள். அதனை மனத்தில் நிறுத்திக் கொண்டு நான் கூறுவதை அதனுடன் பொருத்திக் காணுங்கள்.

சிவந்தமேனி; தடித்த உடல்; பெருத்த தொந்தி; நல்ல உயரம்; வெளுத்த தலைமயிர்; நரைத்தமீசை; தாடி; நீண்டமூக்கு; அகன்ற நெற்றி; உயர்ந்த மயிரடர்ந்த புருவங்கள்; ஆழமான கண்கள்; மெதுவான உதடுகள்; செயற்கைப் பற்கள்; ஒருசாதாரண மூக்குக் கண்ணாடி. இவை அனைத்தும் கலந்த உருண்டையான முகம்; ஒரு தனியான முகவெட்டு; என்னமோ ஒருவிதமான கவர்ச்சி.

இடுப்பில் எப்போதும் ஒரு நான்கு முழத்துணி. காலில் செருப்பு. முக்கால்கையுடன் ஒருமாதிரியான வெள்ளைச்சட்டை. அதில் வரிசையாக நூல் பொத்தான்கள். பழங்காலத்து முழுகோட்டுக்கும் இக்காலத்து ‘ஷர்ட்’டுக்கும் நடுவில் ஒரு நூதனமான உடுப்பு. வெளிப்புறத்தில் மூன்று பாக்கெட்டுகள், உட்புறத்தில் (பணப்பை வைத்துக் கொள்வதற்காக) கட்டாயம் ஒருபாக்கெட். வெளிப்பைகளில் செய்தித்தாள்கள், சில கடிதங்கள், பொதுக்கூட்டத்தில் கேட்கப்பெற்ற கேள்வித்தாள்கள், இரண்டொரு சிறு புத்தகங்கள், துண்டுப்பிரசுரங்கள், நாட்குறிப்பு, ஒருசிறு கத்தி-ஆகிய சகலசாமான்களும் நிறைந்து எப்போதும் உப்பிய வண்ணம் இருக்கும். இவற்றில் பல வெகு மாதங்களுக்கு முந்தியவையாகவும், குப்பைத் தொட்டிக்குப் போயிருக்கவேண்டியவையாகவும் இருக்கும். வெளிப்புறத்துக்கு மேல் ஒரு ‘ஃபவுண்டன் பேனா’ செருகப்பெற்றிருக்கும். உட்புறப்பையில் ஒரு ‘மணிபர்ஸ்’. அதன் அறையொன்றில் கடிகாரம்.

இவ்விதமான ஒரு சட்டைப்பைக்குமேல் ஓர் ஐந்து முழப்போர்வை. அநேகமாக ‘ஆரஞ்சு’ அல்லது ‘காப்பி’ நிறத்தில். இந்த உடைகள் பெரும்பாலும் அழுக்காகவே இருக்கும்.[குறிப்பு 1] சட்டைப்பைகளின் ஓரங்கள் அடிக்கடிக் கிழிந்து தொங்கிக் கொண்டே இருக்கும். கையில் எப்போதும் ஒரு மொத்தமானதடி பிடிக்கும் பக்கம் வளைந்திருக்கும்.

கையில் ஒரு தோற்பெட்டி அதற்குப் பூட்டுமில்லை; சாவியும் இல்லை. மிக அந்தரங்கமான சொந்தக் கடிதங்கள் முதல் பழைய செய்தித்தாள்கள், பட்டையாக நசுக்கப் பெற்ற பற்பசைக்குழல்,


  1. இவர் சரியாகக் குளிப்பது இல்லை. இவரை இழுத்துப்பிடித்துக் குளிக்க வைப்பது நாகம்மையாருக்குப் பெரும்பாடாக இருக்கும்.