பக்கம்:தந்தை பெரியார் சிந்தனைகள்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமூகம்பற்றிய சிந்தனைகள்

117



நம்பும் மூடத்தனம் இவற்றைத் தந்தைவழியில் நின்று விளக்கினேன். பொங்கல்விழாவைத் தவிர ஏனைய விழாக்கள் மூடத்தனத்தை அடிப்படையாகக் கொண்டது என்பது அய்யா அவர்களின் கருத்து என்பதைச் சுட்டிக்காட்டினேன். சிறந்த சமூகத்தலைவர்களாக நின்று தொண்டாற்றிய அறிஞர் அண்ணாத்துரை, டாக்டர் அம்பேத்கார், காமராசர் இவர்கள் செய்த பணிகளை விளக்கினேன். சிறப்பாக காமராசர் ஆற்றிய கல்விப்பணிகளைக் விரிவாக விளக்கினேன். கலைஞரைத் தந்தையவர்கள் ஓர் இராஜதந்திரியாக மதிப்பீடு செய்ததை நினைவு கூர்ந்தேன். இப்பொழிவில் நாம் பெரியாரைப் பற்றி தெரிந்து கொண்டவை: அவர்தம் ஓய்வறியாத உழைப்பு, உண்மைகளை அஞ்சாமல் வெளியிடும் நெஞ்சுரம், தன்னலம்புகாத தன்னேரில்லாத பொதுத்தொண்டு என்று இவர் தம் பேச்சுத் திறன் ஆகியவற்றைச் சுட்டியுள்ளதை காட்டி இவைதாம் பெரியார் என்பதை நினைவூட்டினேன். இதுகாறும் என் உரையைக் கேட்ட அறிஞர் பெருமக்கள் அனைவர்க்கும், மாணாக்கச்செல்வங்களுக்கும் என் நன்றி உரித்தாகின்றது.

அடுத்த மூன்றாவது பொழிவு ‘மொழிபற்றிய சிந்தனைகள்’ என்பது. இது மிகவும் சிக்கலான பிரச்சனைகளைக் கொண்டது. இதற்கும் வருகைதந்து சிறப்பிக்க வேண்டுகிறேன்.