பக்கம்:தந்தை பெரியார் சிந்தனைகள்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மொழிபற்றிய சிந்தனைகள்

119



பெருகியது. இருவரும் பெருமாளை நினைத்துப் பிள்ளைவரம் வேண்டினர்; பாகவதர்கட்குப் பணிவிடை செய்தனர்; சனிக்கிழமை நோன்பு, ஏகாதசி விரதம் இருந்தனர்; இராமாயணம் கேட்டனர்; பாகவதம் கேட்டனர்; இவ்வகையாக இருவருக்கும் வைணவப்பற்று மிகுந்தது.

இவர்கள் ஏக்கம்தணிய ஈ.வெ. கிருட்டிணசாமி 1877 ஆம் ஆண்டு செப்டம்பர் 28-ஆம் நாள் பிறந்தார். இவருக்குப் பின் 1879-ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 17ஆம் நாள் ஈ.வெ. இராமசாமி பிறந்தார். இவருக்குப் பின் இரண்டாண்டுகள் கழித்துப் பொன்னுதாயம்மாள் பிறந்தார். இவருக்குப்பின் பத்தாண்டுகள் கழித்துக் கண்ணம்மாள் பிறந்தார். குடும்பம் புதல்வர்களால் பொலிந்தது.

ஈ.வெ.ரா வுக்குக் கல்வி சரியாக அமையவில்லை. துடுக்குத்தனத்தை அடக்கவே பள்ளியில் போடப்பெற்றார். திண்ணைப் பள்ளியில் 3 ஆண்டும் ஆங்கிலப்பள்ளியில் 2 ஆண்டும் படித்தார். 4-ஆம் வகுப்பு தேறி சான்றிதழ் பெற்றார். படிப்பு 11-வயதிலேயே முடிந்தது. தந்தையார் மண்டியில் வேலை. நன்றாகப் பேசுவார். வணிகர்களிடம் நன்றாகப் பழகுவார்.

19-வயதில் 13-வயதுடைய நாகம்மாளை மணந்தார். நாகம்மாள் தம்தாயின் ஒன்றுவிட்ட தம்பியின் பெண். பள்ளியை எட்டிப்பார்க்காதவர். திருமணம் ஆகி சில ஆண்டுகட்குப் பின்னர் கையெழுத்துப்போட மட்டிலும் கற்றுக்கொண்டவர். 35 ஆண்டுகள் கணவனோடு இணைந்து-பிணைந்து-வாழ்ந்து கணவனுடைய எல்லா நிகழ்ச்சிகட்கும் தோள் கொடுத்து உதவினார். படிப்பில்லாவிட்டாலும் சிறந்த அறிவாளியாகத் திகழ்ந்தார். திருமணம் ஆகி இரண்டாண்டுகள் கழித்து ஒரு பெண் குழந்தை பிறந்தது. ஐந்து மாதங்கள் வாழ்ந்து இறந்தது. பிறகு குழந்தையே பிறக்கவில்லை.

வகித்த பதவிகள்: இளமைத் துடுக்கில் இருந்தபோது நேரிட்ட விலைமாதர் தொடர்பு, காலிகள் தொடர்பு முதலியவை நாளடைவில் நல்லோர் கூட்டுறவுவால்[குறிப்பு 1] அகன்றன. உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசாத வெள்ளை உள்ளமும், செல்வராயினும் எளிய வாழ்வும், அஞ்சாமையும், உரிமை வேட்கையும் இவரைப் பொதுநலத் தொண்டில் கொண்டு


  1. திரு.வி.க., ஆர்.கே. சண்முகம் செட்டியார், இராஜாஜி, சேலம் விசயராகவாசாரியர், நாவலர் எஸ்.எஸ் பாரதியார் முதலிய பலர். அதிக விவரம் வேண்டுவோர் சாமி. சிதம்பரனார் எழுதிய ‘தமிழர் தலைவர்’ என்ற நூலைப் படித்தறியலாம்.