பக்கம்:தந்தை பெரியார் சிந்தனைகள்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பேசினார். தாம் அணிந்த ஆடம்பரமான ஆடைகளையெல்லாம் உதறி எறிந்தார். சிறுசுருட்டு பிடிப்பது, வெற்றிலை போடுவது முதலியவற்றை ஒரே பகலில் அடியோடு நிறுத்தினார். ஒரு சாது ஆனார். முரட்டுக்கதரையே உடுத்தினார். தம் துணைவியார் நாகம்மையாரையும் கதர் உடுத்தச் செய்தார். 80 வயதுள்ள தம் அன்னையாரையும் கதர் உடுத்தச் செய்தார். தம் வீட்டிலுள்ளவர்களையும் இனத்தவரையும் நண்பர்களையும் கதர் அணியச் செய்தார்.[குறிப்பு 1] கதர் இயக்கம் இவரால்தான் பலமடைந்தது. கதர்இயக்கம், கள்ளுக்கடைமறியல் போன்றவற்றில் இவர் தொண்டு ஈடு எடுப்பும் அற்றது. கதர்வளர்ச்சிக்காக இராட்டினத்தைத் தூக்கிக் கொண்டு ஊர்ஊராகச் சுற்றி வந்தார். கதர் மூட்டை தூக்கிவிற்றார். இங்ஙனம் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்ட காங்கிரசு கட்சியில் சாதி வேறுபாடு தலைவிரித்தாடியது. ‘தமிழ்நாட்டுக் குருகுலம்’ என்ற பெயரில் சேரன் மாதேவியில் (நெல்லை மாவட்டம்) பார்ப்பனப் பிள்ளைகட்குத் தனிஉணவு, பார்ப்பனரல்லாத பிள்ளைகளுக்கு வேறு உணவு, வேறு இடம், வேறு வேறு பிரார்த்தனை. இதன் மூலம் சாதிப்பிரிவுக்கு ஆக்கம். இவை குருகுலத்தில் நடைபெற்றன. ஈ.வெ.ரா இதனை எதிர்த்தார். அப்போது அவர் காங்கிரசு செயலாளர். இதனையும் வேறு பலகாரணங்களையும் கொண்டு காங்கிரசுக்கு முழுக்கு போட்டார். சுயமரியாதைக்கட்சி தொடங்கப்பெற்றது. இத்தகைய கோடாரிக்காம்புகள் காங்கிரசில் இருப்பதனால் தமிழ்நாடு காங்கிரசு கழுதை தேய்ந்த கட்டெறும்புபோல் ஆகிவிட்டது. இத்துடன் இவை நிற்க.

தாய்மொழி கன்னடம், இருந்தாலும் தமிழில் தான் ஈடுபாடு. இதைத்தான் பயன்படுத்தினவர்.[குறிப்பு 2] தம்வாழ்க்கையை கடவுள், சாதி


  1. 1937-1941 வரை நான் கதர் அணிந்தவன். 1936 திருமண முகூர்த்த சேலையும் முகூர்த்த வேட்டியும் கதரே. நானும் என்மனைவியும் (1937முதல்) இராட்டையில் நன்கு நூற்போம். 1942 முதல் சிறிது சிறிதாகவிடநேர்ந்தது வெறுப்பால் அல்ல. தலைக்குமீறிய பள்ளிப்பணி. தொண்டெல்லாம் கல்விக்கு அற்பணித்தேன். திருச்சி மாவட்டத்தில் சிறந்த தலைமை ஆசிரியர், கணித அறிவியல் ஆசிரியர் என்ற புகழ் பெற்றேன்.
  2. எனது தாய்மொழி தெலுங்கு. படித்தது தமிழ். அறிவியல் படிப்பு; தமிழுக்கு வந்தவன். தாய்மொழி தெலுங்கு என்று கூறி சென்னைப் பல்பகலைக் கழகத்தில் நுழையமுடியாமல் செய்துவிட்டனர். திருப்பதியிலும் ‘அரவவாடு’ என்று கூறி அருவருப்புக் காட்டினர். The mother has come to daughter’s house. Treat her with respect என்பது போல் நகைச்சுவையாகப் பேசி அனைவராலும் அரவணைக்கப் பெற்றவன். இப்போது இங்குத் தமிழ் இலக்கியத் துறையில் வாழ்நாள் Emeritus Professor ஆகப்பணி; மூன்று பிஎச்.டி. மாணவர்கட்கு வழி காட்டும் பொறுப்பு.