பக்கம்:தந்தை பெரியார் சிந்தனைகள்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

122

தந்தை பெரியார் சிந்தனைகள்



ஒழிப்பு இவற்றிற்காக அர்ப்பணித்துக் கொண்டு வாழ்ந்தவர். அமைச்சர் பதவி, ஆளுநர் பதவி எல்லாம் வந்தன. அனைத்தையும் மறுத்து பொதுத்தொண்டையே வாழ்க்கைப் பணியாக ஏற்றுப் பணியாற்றியவர். தமிழுக்குத் தொண்டு செய்தார். “தமிழர்கட்கு நிறைய நன்மைகள் விளையவேண்டும்; நாட்டில் புரட்சிகரமான செயல்கள் பல நடைபெறவேண்டும். இதுவே என் ஆசை” என்று சொன்னவர். “அறிவியல் முறையில் தமிழ் வளம் பெறவேண்டும்” என்று அவாவுபவர். பல மேடைகளில் “ஒரு நாட்டில் பிறந்த மக்களுக்கு வேண்டப்பெறும் பற்றுகளுக்குள் தலையாய பற்று மொழிப் பற்றேயாகும். மொழிப்பற்று இல்லாதாரிடத்து நாட்டுப்பற்று இராதென்பது உறுதி. . . தமிழ் நாட்டில் பிறந்தவர்கட்கு மொழிப்பற்று அவசியம் அவசியம்” என்று சொல்லி வந்தவர்.

இப்பொழிவின் கருவாக உள்ள கருத்துகளுக்குள் புகுவதற்கு முன் அறிவியலடிப்படையில் மொழியின் தோற்றம், வளர்ச்சி பற்றிய செய்திகளை அறிந்து கொள்ளல் சாலப்பயன் தரும் எனக்கருதுகிறேன். சிலவற்றை உங்கள்முன் வைக்கிறேன்.


2. மொழியின் தோற்றம்


‘மொழி’ என்பது மக்கள் படைத்துக் காக்கும் அரியதொரு கலையாகும். மொழியே மக்களின் அறிவை வளர்த்து உயர்த்தும் அரிய கருவியாகவும் உள்ளது. பெற்றதாயின் முதல் வேட்கை தன் குழந்தையுடன் பேசுதல்; அவள் முதலில் அடையும் பெருமகிழ்ச்சி, குழந்தையின் பேச்சைக் கேட்பதிலேயே ஆகும். குழந்தையின் மனவளர்ச்சியோடு ஒத்துவளர்ந்து வருவது மொழிவளர்ச்சியேயாகும். மனம் என்பது பெரும்பாலும் மொழியால் வளர்ந்து அமைந்தது; மனத்தின் வளர்ச்சிக்கு ஏற்பவே பேசுவோரின் மொழியும் வளர்ச்சி பெற்று நிற்கும். மக்கள் அனைவரும் மொழிக்கு ஆசிரியராகவும் உள்ளனர்; மாணாக்கராகவும் உள்ளனர்; மொழியை வளர்ப்பவரும் மக்களே; மொழியால் வளர்பவரும் மக்களே.

பலர் சேர்ந்து ஒரு சமுதாயமாய் ஓர் இனமாய்ப் பழகி வாழ்வதற்குத் துணையாகவுள்ள சிறந்த கருவி மொழியேயாகும். பலர் ஓர் இனமாய் வாழ்கின்றனர் என்பதற்கு உண்மையான அறிகுறி அவர்களின் நிறம் முதலிய எவையும் அல்ல; அவர்கள்