பக்கம்:தந்தை பெரியார் சிந்தனைகள்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

124

தந்தை பெரியார் சிந்தனைகள்



மொழியில் சொற்கள் மனம்போன போக்கில் அமைகின்றன எனலாம்- என்று கருதுவர் ஜே. வென்றிஸ் என்ற மொழி இயல் வல்லுநர்.

எது தமிழ்? மேற்கூறிய அடிப்படையில் தமிழ்மொழியை நோக்குவோம். தமிழ்மொழியை ஆறு கோடி (2001 கணக்குப்படி) மக்களுக்கு மேல் பேசுகிறார்கள். தமிழ் என்பது அந்த ஆறுகோடி மக்களின் பேச்சும் சேர்ந்த ஒன்றா? அன்று. ஆறு கோடி மக்களின் பேச்சில் சராசரியான ஒன்று எனலாம்; அல்லது, ஆறு கோடி மக்களில் ஏறக்குறைய ஒரே வகையாகப் பேசும் பெரும்பாலோரின் பேச்சே தமிழ் எனலாம்.

பேசும் மக்களுக்குள் பலவகை வேறுபாடுகள் இருக்கின்றமையால் ஒருசாரார் பேசும் பேச்சையே அந்த மொழி என்று கூறிவிட முடியாது. பேசுவோர் ஒவ்வொருவரின் பேச்சிலும் சிறிது சிறிது வேறுபாடு இருத்தலால், ஒவ்வொருவரும் ஒவ்வொருவகைத் தமிழ் பேசுகின்றனர் எனலாம். பேசும் இனத்தார் அல்லது வகுப்பார்க்குள் வேறுபாடு இருந்தால், ஒவ்வொரு வகுப்பு, அல்லது இனமும் ஒவ்வொருவகைத் தமிழ் பேசுவதாகக் கூறலாம். திருநெல்வேலித்தமிழ், தஞ்சைத் தமிழ், செட்டிநாட்டுத் தமிழ், வைணவ பார்ப்பனர்த் தமிழ், சுமார்த்தப் பார்ப்பனர் தமிழ், ஆதிதிராவிடர் சேரித்தமிழ், சென்னைத்தமிழ்- இவற்றில் வேறுபாடுகளின் குறிப்புகள் நமக்குப் புலனாகும்.

பலகால உழைப்பு: இன்னும் ஆராய்ந்து நோக்கினால், மொழி என்பது ஒரு தலைமுறையினர் மட்டும் பேசும் கருவி அன்று என்பது விளங்கும்; நூற்றுக்கணக்கான தலைமுறையினர், கணக்கற்ற மக்கள் வழிவழியாக வளர்த்துப் போற்றிவரும் கருவி எனத்தக்கது இது. ஓர் எடுத்துக்காட்டால் இதனை விளக்க முயல்வேன்.

தஞ்சைப் பெருங்கோயில், கங்கை கொண்ட சோழபுரத்துக் கோயில் போன்ற கட்டடம் ஒரு குறிப்பிட்ட காலத்து மக்கள் பாடுபட்டுக் கட்டிய பெருங்கட்டடம் ஆகும். ஆனால், தஞ்சை மக்கள் பேசும் மொழியாகிய தமிழ், கணக்கற்ற தலைமுறைகளாக கணக்கற்ற மக்கள் ஓயாமல் உழைத்துத் தந்தது, இன்னும் விடாமல் உழைத்துப்போற்றி வருவது என்று கூறவேண்டும்.

தொல்காப்பியனாரின் உழைப்பும் இதில் கலந்திருக்கிறது; தொல்காப்பியனார் வேற்றுமைகளைப்பற்றியும், சாரியை முதலியவைகளைப்பற்றியும் ஆராய்ந்து எழுதுவதற்குக் காரணமாக இருந்த அக்காலத்துத் தமிழைப் பேசியும் எழுதியும் வளர்த்த மக்களின் உழைப்பும் இதில் கலந்துள்ளது.