பக்கம்:தந்தை பெரியார் சிந்தனைகள்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எதை எடுத்துக் கொண்டாலும் அவற்றிலிருந்து எழுத்து, சொல், பொருள், அணி, யாப்பு என்பதான இலக்கணப்படி அமைந்த தமிழ்ச்சுவை அல்லாமல் அறிவு, பகுத்தறிவு, வாழ்க்கை அறிவு, வளர்ச்சி அறிவு பெறுவதற்கான ஏதாவது ஒரு சாதனைத்தைச் சிறு கருத்தை உருப்பெருக்கி வைத்துத்தேடியாவது கண்டுபிடிக்க முடியுமா?[குறிப்பு 1]

(ix) தமிழனைத் தலையெடுக்க முடியாமல் செய்வது தமிழ் மொழியில் உள்ள இலக்கியங்கள் - நூல்களே. அவை புதைகுழியின் மீது பாறாங்கல்லை வைத்து அழுத்தி இருப்பதுபோன்று தலைதுாக்க முடியாமல் செய்து வருகின்றன.[குறிப்பு 2]

(x) தமிழில் ஆரியம் புகுந்ததால்தான் காட்டுமிராண்டித்தனம் புகுந்துவிட்டது. இதில் பண்டிதர்கள் கவனம் செலுத்த வேண்டாமா? கவலை எடுத்துக்கொள்ள வேண்டாமா? வெளிநாட்டு மக்கள் எல்லாம் காட்டுமிராண்டிகளாக வாழ்ந்தகாலத்தில் கப்பலோட்டிக் கடல் கடந்து வாணிகம் நடத்திய தமிழர்களின்மரபில் இன்று ஒரு நியூட்டன் தோன்றவில்லை; ஓர் எடிசன் தோன்றவில்லை; ஒரு மார்க்கோனி தோன்றமுடியவில்லையே என்பதை அறிந்து கொள்ள வேண்டாமா?[குறிப்பு 3]


  1. 17 ஆண்டுகள் ஆந்திரத்தில் பணியாற்றினாலும் என் தாய்மொழியாகிய தெலுங்கைக் கற்கும் ஆசை ஏற்படவில்லை. அறிவியல் ஆசிரியர்களின் துணை கொண்டு தாவரஇயல், விலங்கியல், உயிரியல் போன்ற துறைகளில் அறிவு பெற்றேன். அத்துறைகளில் நான் ஐந்து அறிவியல் மூலநூல்களை எழுதி வெளியிட்டேன். ஒரு பெரிய கல்வியியல் நூலை மொழிபெயர்த்து வெளியிட்டேன். “பிறநாட்டு சாத்திரங்கள் தமிழ்மொழியில் பெயர்த்தல் வேண்டும், இறவாத புதுநூல்கள் தமிழ் மொழியில் இயற்றல் வேண்டும்” என்ற பாரதியாரின் வாக்கு எனக்கு இத்திசையில் செல்ல உந்தல் கொடுத்தது
  2. இது பின்னர் விளக்கப்பெறும்.
  3. இதற்குத் தமிழாசிரியர்கள் என்ன செய்வார்கள்? அறிவியல் கல்விகற்க ஏற்பாடு செய்து அதனைக் கற்றவர்களை நோக்கிவிடுக்கப் பெறவேண்டிய வினாக்கள் இவை. இவண் குறிப்பிட்ட அறிவியல் அறிஞர்கள் கல்லூரிக் கல்வியின் விளைவால் இவற்றைக் கண்டுபிடிக்கவில்லை. அவர்களின் உள்ளுணர்வும் ஆயும் திறனுமே அவர்கட்குக் கைக்கொடுத்து உதவின. நான் கல்லூரியில் பயின்ற காலத்தில் எனக்கு கணிதம், அறிவியல் கற்பித்த ஆசிரியர்கள் கற்பிக்கும் முறையே எனக்கு இயல்பாக இருந்த உந்தலைத் தூண்டிக் கணிதத்திலும் அறிவியலிலும் அளவற்ற ஆர்வத்தை விளைவித்தது. எனது நூலக அறிவியல் படிப்பும் இவற்றிற்குக் கைகொடுத்து உதவியது.