பக்கம்:தந்தை பெரியார் சிந்தனைகள்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

132

தந்தை பெரியார் சிந்தனைகள்



(3) ஆங்கிலம்: இம்மொழிபற்றி தந்தை பெரியார் அவர்களின் சிந்தனைகள் தீர்க்கதரிசனமானவை. பொறுப்பிலிருக்கும் கட்சி அரசு ஆலோசித்துச் செயற்படுதல் இன்றியமையாதது. தந்தையின் சிந்தனைகளில் சில:

(i) இந்தியா சுதந்திரம் பெற்றுவிட்டாலும் உலகசம்பந்தம் இல்லாமல் இந்தியா வாழ்ந்துவிட முடியாது. வருங்கால உலகம் தேசத்துக்கு தேசம், நாட்டுக்கு நாடு இப்போதுள்ள தூரத்தில் இருக்காது; கூப்பிடு தூரத்தில் இருக்கப்போகிறது. இந்திக்கு ஆகட்டும், வேறு இந்திய மொழிக்கு ஆகட்டும் இனி அடுப்பங்கரையிலும் படுக்கை அறையிலும்கூட வேலை இருக்காது.

(ii) தமிழ் நாட்டுக்கு, தமிழருக்கு வேறு எந்த மொழி தேவையானது நல்லது, அரசியல், விஞ்ஞானம், இலக்கியம், கலை முதலியவைகளுக்கு ஏற்றது, பயன்படக்கூடியது என்று என்னைக்கேட்டால் எனக்கு ஆங்கில மொழிதான் சிறந்தது என்று தோன்றுகிறது. ஆங்கிலமே தமிழரின் பேச்சுமொழியாக ஆகுங்காலம் ஏற்பட்டால் நான் மிக்க மகிழ்ச்சியும் திருப்தியும் அடைவேன்.

(iii) தமிழின் மூலமோ தமிழ் இலக்கியத்தின் மூலமோ, தமிழ்ச்சமயம் தமிழ்ப்பண்பாடு மூலமோ நாம் உலகமக்கள் முன்னிலையில் ஒருநாளும் இருக்கமுடியாது. தமிழ் வடமொழியை விட, இந்திமொழியைவிடச் சிறந்ததென்பதிலும் பயன்படத்தக்கது என்பதிலும் எனக்கு ஐயமில்லை என்றாலும், நாம் இன்றைய நிலையைவிட வேகமாக முன்னேற வேண்டுமானால் ஆங்கிலம்தான் சிறந்த சாதனம் என்றும், ஆங்கிலமே அரசியல் மொழியாகவும், போதனாமொழியாகவும் இருந்தாக வேண்டும் என்றும், ஆங்கில எழுத்துகளே தமிழ் நெடுங்கணக்கு எழுத்துகளாவது[குறிப்பு 1] அவசியம் என்றும், ஆங்கிலமே நமது பேச்சுமொழியாவது நலம் பயக்கத்தக்கது என்றும் தெரிவித்துக் கொள்ளுகிறேன். ஏனெனில் ஆங்கிலம் அறிவு மொழி மாத்திரம் அல்லாமல் அஃது உலகமொழியுமாகும்.

(iv) தமிழ் மக்கள் என்னும் குழந்தைக்குத் தாய்ப்பால் என்னும் தமிழானது முன்னேற்றம் என்னும் உடல் தேறுவதற்கோ வளருவதற்கோ பயன்பட்டு இருக்கின்றதா? பயன்படுமா? தாய்ப்பால் சிறந்தது என்பதில், தாய்ப்பாலில் சக்தியும் சத்தும் இருந்தால்தான் அது சிறந்ததாகும். இங்குத் தமிழ் என்னும் தாயே


  1. இது கருத்து வேறுபாட்டுக்கு உரியது. மேல்மட்டத்திலேயே நம்சிந்தனை போய்க் கொண்டுள்ளது. அடிமட்டத்தில் கிராமமக்கள் நிலையில் இஃது இடையூறாக முடியும் என்பது வெள்ளிடை மலை.