பக்கம்:தந்தை பெரியார் சிந்தனைகள்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மொழிபற்றிய சிந்தனைகள்

133



சத்தற்றவள் என்பதோடு நோயாளியாகவும் இருக்கும்போது அந்தப் பாலைப் பருகும், குழந்தை உருப்படியாக முடியுமா! தாய்க்கு நல்ல உணவு இருந்தால்தானே அவளுக்குப் பால் ஊறும்? அந்தப் பாலுக்கும் சக்தி இருக்கும்? தமிழில் நல்ல உணவு எங்கே இருக்கிறது?

(v) மண்டலமொழியை நாம் எவ்வளவு கற்றாலும் நாம் புலவனாக, வித்துவானாக, பண்டிதனாக, மடாதிபதியாக, ஆழ்வாராக, நாயன்மாராகத்தான் ஆகமுடியுமே ஒழிய, ஒரு நாளும் உலக அறிவு பெற்ற, இயற்கையின் தன்மையை உணர்ந்த அறிவின் எல்லை காண ஒரு சிறிதும் தகுதி உடையவர்களாக ஆக முடியவே முடியாது. ஆங்கிலத்தைப் புறக்கணித்துத் தமிழில் பாடம், படிப்பு, கல்வி சொல்லிக்கொடுத்தல் என்பது மனிதன் செல்லும் அறிவுப் பயணத்தை தடுத்து வழியில் குழி தோண்டி வைப்பது போலத்தான் ஆகும்.

(vi) நான் கல்லூரியில் ஆங்கிலத்தில் பாடம் சொல்லித்தர வேண்டும் என்றும் மூன்றாம் வகுப்பிலிருந்து மாத்திரமல்லாமல் எழுத்தாணிப் பால்குடிக்க வைக்கும்போதே ஆங்கிலத்தில் துவைத்துக் கொடுக்கவேண்டும் என்றும் சொல்லுகிறேன்.

(vii) எந்த ஒரு மொழியின் நடப்பும் பெரும்பாலும் அம்மொழியின்மூலம் அறியக்கிடைக்கும் கருத்துகளைப் பொறுத்துத்தான் இருக்கும். ஆரியருக்கு அடிமைப்பட்டிருக்கும் வாழ்வே ஆனந்தம் என்று நினைத்திருந்த இவ் இந்தியநாட்டு மக்களுக்கு விடுதலை வேட்கையை ஊட்டியதே ஆங்கில அறிவுதான் என்று கூறுவது மிகையாகாது.[குறிப்பு 1]

(viii) நம் இந்திய நாட்டில் உள்ள மக்கள் எல்லாநாட்டு மக்களுடனும் பழகவேண்டுமானால் ஆங்கிலம்தான் எளிதான மொழியாகும். உலக மக்களோடு பழகக் கருத்துமாற்றம் செய்து கொள்ள ஆங்கிலம்தான் கட்டாயமொழியாகும். விஞ்ஞானத்தில் கருத்து செலுத்தவேண்டுமானால் ஆங்கிலத்தினாலேயேதான் முடியும்?

(ix) ஆங்கிலம் சீர்த்திருத்தத்திற்கு ஏற்ற பொருள் உள்ள மொழி. எளிதில் மக்கள் புரிந்து கொள்ளக்கூடிய வாய்ப்பு உள்ள மொழி. ஆங்கிலம் எந்த அளவுக்கு வளர்கிறதோ அந்த அளவுக்கு நாம் அறிவு பெற முடியும். ஆகையால் ஆங்கிலம் வளரவேண்டும்.


  1. ஆங்கிலம் படித்த காந்தி, நேரு முதலியவர்களுக்குத்தான் விடுதலை வேட்கை எழுந்ததேயன்றி வடமொழி படித்த சாத்திரிகட்கும் புரோகிதர்கட்கும் கோயில் குருக்கள்கட்கு ஏன் எழவில்லை? சிந்திக்க வேண்டும்.