பக்கம்:தந்தை பெரியார் சிந்தனைகள்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திணிப்பால் தமிழ்கெடும்; தமிழர் துன்புறுவர்” என்பவற்றை விளக்கிக் கட்டுரை எழுதியுள்ளார்.

தமிழ் நாட்டில் இந்திக்கு எதிர்ப்பு இருக்கும் செய்தியை மாண்புமிகு முதலமைச்சர் ஆச்சாரியார் அறிவார். ஆயினும் “இந்தியைக் கட்டாய பாடமாக்குவேன்” என்று கூறினார். காங்கிரசுகாரர்கள் பலரும் எதிர்த்தனர். தோழர் பசுமலை எஸ். சோமசுந்தர பாரதியார் அவர்கள் அதைக் கண்டித்து முதலமைச்சருக்குக் கடிதம் எழுதினார். தமிழ் நாடெங்கும் பொதுக்கூட்டங்களிலும் மாநாடுகளிலும் முதலமைச்சரின் கருத்து கண்டிக்கப்பெற்றது.

(ஈ) 1937 டிசம்பர்-26இல் திருச்சியில் தமிழர் மாநாடு கூட்டப்பெற்றது. [குறிப்பு 1] தோழர்கள் கி.ஆ.பெ. விசுவநாதம், டி.பி, வேதாசலம் (வக்கீல்) ஆகியவர்கள் இதனைக் கூட்டமுனைந்து நின்றனர். இதில் கலந்து கொண்டவர்கள்: காங்கிரசு கட்சியினர், நீதிக்கட்சியினர், முஸ்லீம்லீக்கினர், கிறித்தவ சபையினர், வைதிகர்கள், புலவர்கள் தாழ்த்தப்பட்டவர்கள் அனைவருமே. மாநாட்டின் தலைவர் பசுமலை நாவலர் எஸ். சோமசுந்தர பாரதியார். இந்தித் திணிப்புக்கு எதிர்ப்பு, தமிழ்நாட்டைத் தனி மாநிலமாக்கல் போன்ற தீர்மானங்கள் நிறைவேறின. இம்மாநாட்டைப் பார்த்தோர் தந்தை பெரியாரையே புகழ்ந்தனர். அவருடைய உண்மைக்கொள்கையே இம்மாநாடாக உருக்கொண்டதென வியந்தனர். இதுமுதல் தமிழர் கிளர்ச்சி வலுத்தது. நகரெங்கும் கூட்டங்கள், மாநாடுகள், தமிழ் உரிமைப்போர், இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சி ஆகியவை நடைபெற்ற வண்ணம் இருந்தன.

ஆயினும் முதலமைச்சர் ஆச்சாரியார் விட்டுக் கொடுக்க வில்லை. ஆணவத்தைத் தளர்வுறச் செய்தது. சிலமாற்றங்களுடன் இதித் திணிப்பு நுழைந்தது. எல்லாப் பள்ளிகளிலும் என்றிருந்த திட்டம் 125 பள்ளிகள் (பரீட்சாரத்தமாக) என்று ஆயின. படிக்கவேண்டியதும் முதல் மூன்று படிவங்களில்தாம் இதற்கும் தேர்வில் தேர்ச்சி பெறவேண்டும் என்ற அவசியம் இல்லை.


  1. இக்காலத்தில் நான் புனித சூசையப்பர் கல்லூரி பி.எஸ்சி வகுப்பு மாணவன். அன்றும் இன்றும் அரசியல் எனக்கு ஒவ்வாமை. செய்திகளைப் படிப்பதோடு சரி. ஞாயிறு மாலைநேரங்களில் நடைபெறும் பொதுக்கூட்டங்களில் தந்தை பெரியார், புதுக்கோட்டை வல்லத்தரசு, திருச்சி ஹாலாசியம் (காங்கிரசு) முதலிய நல்ல பேச்சாளர் பேசுவது தெரிந்தால் தொலைவிலிருந்து பேச்சைக் கேட் பேன். படிப்பைத்தவிர, பிற தாக்கங்கள் என்னைக் கவருவதில்லை.