பக்கம்:தந்தை பெரியார் சிந்தனைகள்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அண்ணாத்துரை (முதல் தி.மு.க முதலமைச்சர்), டி.ஏ.வி நாதன், சாமி அருணகிரிநாதர், கே. இராமய்யா, மறை. திருநாவுக்கரசு, திருவாரூர் பாலசுந்தரம் போன்ற 1,500 பேர்கள் சிறைப்பட்டனர்.

(எ) இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சி நம்நாட்டு மகளிர் மனத்தையும் கொள்ளை கொண்டது. அவர்களும் மொழிப்போரில் ஈடுபட்டனர். 1938 நவம்பர் 13-இல் சென்னையில் மகளிர் மாநாடு நடைபெற்றது. திருவாட்டி நீலாம்பிகை அம்மையார் (மறைமலையடிகளின் திருமகளார்) மாநாட்டுத்தலைவர். இம்மாநாட்டில் தந்தைபெரியார் ஆற்றிய சொற்பொழிவு தமிழர்களின் நெஞ்சில் பாய்ந்தது; உரிமை உணர்ச்சியை எழுப்பிவிட்டது. இம்மாநாட்டில்தான் ஈ. வெ. இராமசாமி பெயருக்கு முன் பெரியார் என்னும் அடைமொழி கொடுத்து அழைக்க வேண்டும் என முடிவு செய்தனர்.

(ஏ) பெரியார் மீது வழக்கு: இம்மாநாடு முடிந்தபின் பல பெண்கள் மறியல் செய்து சிறைபுகுந்தனர். இந்த வீராங்கனைகளைப் பாராட்டும் கூட்டங்களில் நம் அய்யா அவர்களும் பாராட்டினார்கள்; பெண்களின் வீரதீரச் செயல்களை எடுத்துக் காட்டினார்கள். இந்தி எதிர்ப்புக்கும் பெரியாரே காரணம் என்று அரசு கருதியது. ஆதலின் அவரைச் சிறையிலிடக் காலம் கருதியது. பெரியாரின் இருபொழிவுகளைக் கொண்டு அவர்மீது குற்றம் கற்பித்தது. “பெண்களை மறியல் செய்யத் தூண்டினார்” என்பதே அப்பழி. பெரியாருக்கும் அரசு அழைப்பு அனுப்பியது. மகிழ்ச்சியுடன் அதனை ஏற்றுக் கொண்டார்.

வழக்கு சென்னையில் 1938 டிசம்பர் 5, 6ஆம் நாட்களில் நடைபெற்றது. அவர் வழக்கம்போல் எதிர் வழக்காடவில்லை. சர் பன்னீர்செல்வம், குமார ராஜா முத்தய்யா செட்டியார் போன்றவர்கள் எதிர்வழக்காட வற்புறுத்தியும் மறுத்துவிட்டார். இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியின் நோக்கம், தமது அரசியல் கொள்கை ஆகியவற்றை விளக்கும் அறிக்கையொன்றை எழுத்து மூலம் நீதிபதியிடம் கொடுத்ததோடு நிறுத்திக் கொண்டார்.

அவர்கொடுத்த வாக்கு மூலத்தின் சில பகுதிகள்:

“இந்தக் கோர்ட்டு காங்கிரசு அமைச்சர்கள் நிர்வாகத்துக்கு உட்பட்டது. நீதிபதியாகிய தாங்களும் பார்ப்பன வகுப்பைச் சேர்ந்தவர்கள். இவைதவிர இந்தி எதிர்ப்புக்கிளர்ச்சியை ஒழிக்க வேண்டும் என்பதில் காங்கிரசு அமைச்சர்கள் அதிதீவிர உணர்ச்சியுடன் உள்ளார்கள். அதுவிஷயத்தில் நியாயம் அநிநாயம் பார்க்க வேண்டியதில்லை என்றும், கையில்