பக்கம்:தந்தை பெரியார் சிந்தனைகள்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

144

தந்தை பெரியார் சிந்தனைகள்



நீதிபதியின் தீர்ப்பைக் கேட்டவுடன் பெரியார் அதை மகிழ்ச்சியுடன் வரவேற்றார். அன்றலர்ந்த செந்தாமரையினை நிகர்த்தது “அவர் முகம்”.[குறிப்பு 1] ஆனால், அன்பர் பலரும் கண்ணீர் விட்டனர். பன்னீர்செல்வம் போன்ற கலங்கா நெஞ்சினரும் கலங்கிவிட்டனர். நாடெல்லாம் அழுதன. நடுநிலைதவறாத நாளேடுகள் அரசின் போக்கைக் கண்டித்தன. நவசக்தி “ஓய்வு என்பதை அறியாது வீரகர்ச்சனை புரிந்து வந்த கிழச்சிங்கம் இப்பொழுது ஓய்வு பெற்றிருக்கிறது. சிறையில் தலைநிமிர்ந்து நடக்கிறது” (நவசக்தி-9.12.1938. தலையங்கம்) என்று எழுதியது.

பெரியாரைச் சிறையில் வைத்தால் தமிழர் கிளர்ச்சி அடங்கிவிடும் என்று அரசு நினைத்தது. மாறாக அது வலுத்தது. தடுப்பு ஊசி போட்ட பலன் போலாயிற்று. பெரியாரின் வீரகர்ச்சனை தமிழர் காதுகளில் ஒலித்தது. பெரியார் தெளித்த விதைகள் முளைத்து எங்கும் செழித்து வளர்ந்தன. “தமிழ் நாடு தமிழருக்கே” என்று அவர் தந்த மந்திரத்தின் வல்லோசை வானையும் பிளந்தது.

நாமிருக்கும் நாடுநம தென்றறிந்தோம் -இது
நமக்கே உரிமையாம் என்பதுணர்ந்தோம்.
[குறிப்பு 2]

என்ற பாரதியாரின் கவிதை அடிகள் எம்மருங்கும் குதித்துக் கூத்தாடின.


பெரியார் சிறைப்பட்ட சிலநாட்களுக்குப் பின்னர் 1938 டிசம்பர் 18இல் அவர்தம் மணிவிழா நாடெங்கும் நடைபெற்றது. அவர் பெயரால் அன்னதானங்கள், ஊர்வலங்கள், பொதுக் கூட்டங்கள், அவர்கொள்கைக்கு மாறாக அவர் படத்துக்கு தூபதீப ஆராதனைகள் நடைபெற்றன. தமிழ் நாடெங்கும் மூலைமுடுக்குகளிலும் அவர் விழா கொண்டாடப் பெற்றது. அவர் தியாகத்தை மக்கள் உணர்ந்தனர். “தியாகராஜராக” மக்கள் மனத்தில் காட்சி அளித்தார். அரசு செய்வதறியாது திகைத்தது.


  1. கைகேயி காடேக வேண்டும் என்பது தந்தையின் கட்டளை என்று சொல்லக்கேட்ட இராமன் முகம்,
    அப்பொழுது அலர்ந்த செந்தா மரையினை வென்ற தம்மா
    -கைகேயி சூழ்வினை-108

    என்று மலர்ந்தது (இது வனவாசம்). இப்போது இராமசாமியின் முகம் செந்தாமரையினை நிகர்த்தது (இது சிறைவாசம்) இராமன் தன்னிச்சையாகத் திரியலாம். இராமசாமிக்கு அந்த உரிமை இல்லை. இதுதான் ‘வேற்றுமை’. இராமன் படத்தை செருப்பாலடித்தற்கு இது ஒருவகைத் தண்டனையோ என்று எதிரிகள் கருதுகின்றனரோ என்று எண்ணத் தோன்றுகிறது.

  2. பா.க.தேசியகீதங்கள்-சுதந்திரப்பள்ளு-5