பக்கம்:தந்தை பெரியார் சிந்தனைகள்.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


வெறும்பேச்சுப் பேசித்தம் வயிறடைக்கும்
வித்தைகற்ற மேலோர் என்றார்! (4)

ஆட்சிசெயும் முலமைச்சர் பார்ப்பனராய்
இருந்தமையால் [குறிப்பு 1] அவர்வ டக்குப்
பேச்சுதனைத் தமிழகத்தில் வளர்த்துத்தீந்
தமிழ்கெடுக்கும் பெருவி ருப்பால்
சூழ்ச்சிசெய்தார்! இவ்வுண்மை தனையறிந்து
மக்களுக்குச் சொன்னார் தாத்தா!
‘சீச்சியிவர் துரோகி’ எனச் செந்தமிழ
ராய்ப்பிறந்தும் சிலர்ப ழித்தார். (5)

தூய்தமிழை வடமொழியாம் நச்சகற்றிக்
காப்பாற்றத் துடிக்கும் நெஞ்சு
வாய்ந்ததிருப் பாரதியார்[குறிப்பு 2]தலைமையிலே
கூடிநின்ற மிக்க ஆர்வம்
பாய்தமிழர் மாநாட்டை[குறிப்பு 3]திருச்சியிலே
பார்த்தவர்கள் இதுதான் அந்தத்
தூய்மனத்தார் ஈரோட்டுத் தாத்தாவின்
நினைவொத்த தோற்றம் என்றார். (6)

கிளர்ச்சியினை அடக்கித்தம் இந்தியினைப்
புகுத்திவிடும் கீழ்மை யான
உளவுறுதி முதலமைச்சர்க் கிருப்பதனைத்
தமிழரெல்லாம் உணர்ந்த போதில்
தளர்ச்சியிலை எருமைத்தோல் இல்லையெமக்
கெனவுரைத்து ‘தமிழ்வாழ் கெ’ன்று
கிளர்ந்தெழுந்தார்! பெரியாரே தலைவரெனில்
வேறென்ன கேட்க வேண்டும்? (7)

இந்து-தியா லாஜிகல் பள்ளிமுன்னும்
முதலமைச்சர் வீட்டு முன்னும்
செந்தமிழை மீட்பதற்குச் சேர்ந்தபடை
வீரரெலாம் சென்று நின்று
‘இந்தி விழ! தமிழ்வாழ்க!’ எனமுழங்கப்
பல்லடத்துப் பொன்னு சாமி
செந்தமிழைக் காவாமல் எனக்குணவு
செல்லாதென்றாணை யிட்டான்! (8)


  1. சக்கரவர்த்தி இராசகோபாலாசாரியார்
  2. பசுமலை நாவலர் ச. சோமசுந்தர பாரதியார்
  3. 1937 டிசம்பர் 26இல் கூட்டப்பெற்ற ‘தமிழர் மாநாடு’