பக்கம்:தந்தை பெரியார் சிந்தனைகள்.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

152

தந்தை பெரியார் சிந்தனைகள்



(4) தமிழை நன்கு அறியாதவன்தான் இவை நான்கும் தமிழ் அல்ல என்று கூறுவான்.

தந்தை அவர்களின் கருத்து எளிதாகத் தள்ளப்பெறுவது அல்ல. நம்முடைய கல்விச் செருக்கால் படியாதவர் உளறுகின்றார் என்று நினைப்பது தவறு. தந்தையாரின் கருத்து மேலும் மேலும் ஆழ்ந்து ஆராய்தற்குரியது.

இவற்றிற்குள்ளும் சில சொல்ல ஆசைப்படுத்துகிறேன்.

ஆங்கிலேயர் ஆட்சியில் நம்நாட்டில் கிறித்தவ சமயத் தொண்டர்களும் அரசு அதிகாரிகளும் குறிப்பிடத்தக்க நிலையான பல்வேறு வகையில் தொண்டாற்றியுள்ளனர். மொழிநூல் துறைக்கு வித்திட்டவர்கள் மேனாட்டார். டாக்டர் குண்டர்ட் மலையாள மொழியைச் செவ்வனே கற்று ‘வடமொழியில் திராவிடக்கூறுகள்’ என்ற கட்டுரையை வெளியிட்டார் (1809). டாக்டர் கிட்டல் என்ற அறிஞர் கன்னட மொழியை முட்டறுத்துணர்ந்து 1872இல் ‘வடமொழி அகராதியில் திராவிடச் சொற்கள்’ என்ற கட்டுரையை வெளியிட்டார். ஆந்திரத்தில் அலுவல்பார்த்த சி.பி. பிரெளன் (மாவட்டத்தலைவர்) என்பார் தெலுங்கு மொழியினைத் துருவி ஆராய்ந்து தமது கருத்துகளை கட்டுரைகளாக வெளியிட்டார். நீலகிரியில் வாழும் தோடர்மொழிச் சொற்களை ஆய்ந்து போப் வெளியிட்டார். இவையெல்லாம் பின்னர் வந்த கால்டுவெல்லுக்குத் துணையாக இருந்தன. அவர் தமிழில் கவனம் செலுத்தினார். அனைத்தையும் ஒரு சேரவைத்து ஆராய்ந்து ‘திராவிட மொழிகளில் ஒப்பிலக்கணம்’ (A Comparative Grammar of Dravidian Languages) என்ற நூலை வெளியிட்டார். இவரால் ‘திராவிட மொழியினம்’ உலகுக்கு உணர்த்தப் பெறலாயிற்று. இதன்படி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு, குடகு என்ற ஆறும் திருந்திய மொழிகள். தூதம், கோடம், கோந்த், கந்த், ஒரொவன், இராஜ்மகால் என்ற ஆறும் திருந்தாமொழிகள். இவற்றுடன் பிராஹூய் மொழியும் சேர்தல் உண்டு.


6. எழுத்துச் சீர்திருத்தம்

இன்றைய தமிழ் வரிவடிவத்தில் செய்யப்பெற வேண்டிய மாற்றங்கள் பல என்பதைப்பற்றிப் பலருக்குக் கருத்து இருந்தாலும் எவரும் துணிவாய் முன்வராமலே உள்ளார்கள். ஆனால் தந்தை பெரியார் அரைநூற்றாண்டிற்கு முன்னதாகவே துணிவாகவே சில வரிவடிவங்களில் மாற்றம் செய்து விடுதலை, குடியரசு