பக்கம்:தந்தை பெரியார் சிந்தனைகள்.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

154

தந்தை பெரியார் சிந்தனைகள்



எழுத்துகளை, அதாவது அவசியமல்லாத எழுத்துகளைக் குறைக்க வேண்டியதும் அவசியமாகும்.[குறிப்பு 1]

(6) வரிவடிவத்தில் மாற்றம் செய்வது மொழியின் பெருமையும் எழுத்துகளின் மேன்மையும் பெற்று, அவை எளிதில் தெரிந்து கொள்ளக்கூடியனவாகவும், கற்றுக் கொள்ளக்கூடியனவாகவும் இருப்பதைப் பொறுத்ததேயொழிய வேறல்ல.

(7) தமிழ்மொழியில் உள்ள எழுத்துகளை எடுத்துக் கொண்டால் எல்லாம் காட்டுமிராண்டிக்காலத்திய எழுத்துகள்தாம். எத்தனை சுழி! எத்தனை கோடு! எத்தனை மேல் இழுப்பு! எத்தனைக் கீழிழுப்பு! இந்தக் காலத்தில் இத்தனை எழுத்துகள் எதற்காக இருக்கவேண்டும்? நமக்கு எதற்காக 216 எழுத்துக்கள்? உலகத்திலேயே உயர்ந்த அதிசய அற்புதம் எல்லாம் பண்ணுகிறானே வெள்ளைக்காரன்? அவனுடைய மொழியான ஆங்கில மொழியில் அவன் 26 எழுத்துகளைத்தானே கொண்டிருக் கின்றான்? அந்த 26 எழுத்துகளை வைத்துக்கொண்டு அவன் உலகத்தையே புரட்டுகிறான்.[குறிப்பு 2]

(8) நமது பெண்கள் கோலம் போடுவதையாவது விரைவில் கற்றுக்கொள்ளலாம். ஆனால் நமது எழுத்துகளைக் கற்றுக் கொள்வது நமது குழந்தைகளுக்குச் சிரமமாக உள்ளது. பல ஆண்டுகளாக நான் எழுத்துச் சீர்த்திருத்தம்பற்றிச் சொல்லி வருகிறேன். எவன் கேட்கிறான்? இன்றைக்கு நேரு இந்தியாவுக்குப் பொதுஎழுத்து (லிபி) வேண்டும் என்கிறார். மொழியில், எழுத்தில் மாறுதல் உண்டுபண்ணவேண்டும் என்றால் நமது புலவர்கள் குறுக்கே படுத்துக்கொண்டு தடுக்கின்றார்களே!

(9) தமிழ்மொழிக்கு ஆங்கில எழுத்துகளைப் பயன்படுத்திக் கொள்ள முன் வருவோமானால், மொழிபற்றி, எழுத்துபற்றி கற்பதுபற்றிய சிரமங்களும் பிரச்சனைகளும் பறந்தோடிவிடும்.


  1. உயிர் எழுத்துகள் 12இல் ஒள காரம் நீக்கப்பெற்றால் உயிர்மெய் எழுத்துகளில் (216களில்) 18 எழுத்துக்கள் குறைந்து விடுகின்றன.
  2. பெரும்பாலான ஐரோப்பியமொழிகளின் எழுத்துகள் யாவும் ஆங்கில மொழியில் பயன்படும் 26 எழுத்துகளே. ஒரு குறிப்பிட்ட கணக்குப்படி இயக்கினால் ஆங்கில மொழிவரும். வெவ்வேறு வகைகளில் இயக்கி வெவ்வேறு மொழிகளை உண்டாக்கலாம். இத்தனை விதமாக இயக்கி இத்தனைவிதமான மொழிகளை உண்டாக்கும் ஒருவனுக்கு மிகப் பெரிய ஊதியம். ஐரோப்பாவில் இவனுக்கு அளிக்கப்பெறும் ஊதியம் போல் எந்த உயர்ந்த அலுவலர்க்கும் இல்லை!