பக்கம்:தந்தை பெரியார் சிந்தனைகள்.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

156

தந்தை பெரியார் சிந்தனைகள்



செய்த பணியை எண்ணிப் பார்த்தால் புலவர்கள் மூக்கின்மேல் விரலை வைத்துக் கொள்ளவேண்டும்; அறிஞர்கள் பெரியாருக்குச் ‘சலாம்’ போடவேண்டும்.

7. தமிழ்ப்புலவர்கள்

தமிழ் மொழியைப் பற்றியும், இலக்கியத்தைப் பற்றியும் ஆராய்ந்து பேசும், எழுதும் தமிழ்ப்புலவர்களைப் பற்றி தந்தை பெரியார் அவர்கட்கு நல்ல மதிப்பு இல்லை; குறைகள் மிகுந்தவர்கள், ஒழுங்கற்றவர்கள், யோக்கியதை இல்லாதவர்கள் என்றே கருதுகின்றார். புலவர்களைப் பற்றி அய்யா அவர்களின் சிந்தனைகள்:

(1) நம்நாட்டில் எனக்குத் தெரிந்தவரையில் தமிழ்நாட்டுக்கோ, தமிழ் பண்பாட்டுக்கோ ஒரு பலனும் புலவர்களால் ஏற்பட்டதில்லை. தமிழ்ப்புலவர்கள் ஆரியப்பண்பாடு, பழக்கவழக்கங்களில் மூழ்கிப் போனவர்களாவார்கள். மேனாட்டுப் புலவர்கள் இப்படியல்லர்; அவர்கள் மக்கள் வாழ்க்கைக்குப் பயன்படக்கூடிய வழியில் பாடுபட்டனர்.

(2) இன்று புலவர்களில், அறிஞர்கள் நல்ல ஆராய்ச்சியாளர்கள் இருப்பார்களேயானால் கற்பனையான மூடநம்பிக்கையான இலக்கியங்களை மக்களுக்கு எடுத்துகாட்டி இவற்றைப் பற்றிய மக்கள் கருத்தைத் திருத்திக் கொள்ளவும் செய்வதோடு அதே இலக்கியங்களையும் திருத்தியாக வேண்டும். புதிய புதிய இலக்கியங்களை, மக்களுக்கு அறிவூட்ட வல்லவையும் பகுத்தறிவை அடிப்படையாகக் கொண்டதுமான இலக்கியங்களைச் செய்யவேண்டும்.

(3) மக்களுக்கு அறிவுவரும்படி எதையும் சொல்ல ஒரு வெங்காயப் புலவனும் இல்லை. அவன் வேலைக்குப் போனாலும் அங்குப் புராணக் கதை என்று பேசுவானே தவிர மனிதன் அறிவு வருவதற்காகப் பேசமாட்டான். நல்ல புலவன் ஆபாசக்கதைகளுக்கு வியாக்கியானம் எழுதினவனாகவே இருப்பான். நல்ல புலவன் என்றால் இவர்பெரிய புராணத்திற்கு விளக்கம் எழுதியவர், இவர் கம்பராமயாணத்திற்கு நுண்பொருள் கண்டவர் என்ற நிலையில் இருப்பானே தவிர ஒருவனும் அதில் வரும் அசிங்கங்களை நீக்கி அறிவு வரும்படிச் செய்யக் கூடியவனாக இல்லை.

(4) நமது நாட்டில் இன்றைக்கு டாக்டர் பட்டம் பெற்ற புலவர்கள் பலர் இருக்கின்றனர். இவர்கள் எல்லாம் பழமைக்கு மெருகு பூசுபவர்களாக இருக்கின்றனரேயொழிய, இலக்கியங்களி