பக்கம்:தந்தை பெரியார் சிந்தனைகள்.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

162

தந்தை பெரியார் சிந்தனைகள்



தமிழ் மக்களுக்கு இலக்கியம் பரவிற்றா என நடுநிலையிலிருந்து யோசித்துப் பாருங்கள்.[குறிப்பு 1]

(8) கம்பராமாயணக் கதையை எடுத்துக் கொண்டால் வெறும்பொய்க் களஞ்சியம் அது. அதன் கற்பனையை எடுத்துக் கொண்டால் சிற்றின்ப சாகரம்.[குறிப்பு 2] அஃதாவது இஃது ஒரு காமத்துப்பால் என்றுதான் சொல்லலாம். நடப்பை எடுத்துக்கொண்டால் காட்டுமிராண்டித்தனத்தின் உருவம். இவற்றில் இன்றைய அநுபவத்திற்கு அறிவு உலகப் போக்கிற்கு, வளர்ச்சிக்குப் பயன்படக்கூடியவை என்பதாக என்ன காணமுடிகிறது?

(9) நமது நாட்டுக்குத் தெளிவான உண்மையான வரலாறே இல்லை; வரலாறு எழுதப்புகுந்தவர்கள் எல்லாம் பார்ப்பனர்கள். நமது வரலாறு மட்டும் உண்மையாகக் கிடைத்து இருக்குமேயானால் இவ்வளவு மோசம் ஏற்பட்டு இருக்காது. வரலாற்றினைக் கூறினால் படித்தால் உணர்ச்சி உண்டுபண்ணும்படியான நிலையில் நமக்குவரலாறே இல்லை.

(10) தமிழனுக்கு இலக்கியம் என்று சொல்லுவதற்குத் தனித்தமிழ் இலக்கியம் எதுவும் கிடையாது. தமிழில் ஆரியம் கலந்த இலக்கியமே இருக்கின்றன.[குறிப்பு 3]

இலக்கியங்கள்: இவ்வளவு கடுமையாகச் சிந்தித்த தந்தையவர்கள் இரண்டு இலக்கியங்களையும் குறிப்பிடுகிறார்கள் அவை:

குறள்: மேலே குறளைப்பற்றிச் சற்றுக்குறைவாகப் பேசியதைக் குறிப்பிட்டேன். ஈண்டு அதை மிகப் பெருமையாகப் பேசுகின்றார்கள். அவற்றுள் சில சிந்தனைகள்.

(1) அறிவால் உய்த்துணர்ந்து ஒப்புக்கொள்ளக்கூடியனவும் இயற்கையோடு விஞ்ஞானத்துக்கு ஒப்ப இயைந்திருக்கக் கூடியனவும் ஆன கருத்துகளையே கொண்டு இயங்குகிறது வள்ளுவர் குறள்.


  1. இதை எழுதினவன் தமிழன். ஆரியன் அல்லன். கதைதான் வடநாட்டுக்கதை
  2. சுவை என்பது வாழ்க்கை நிகழ்ச்சிகளில் வருவது அல்ல. காவியத்தில், நாட்டியத்தில் வருவது. அது பொருளைப் புறக்கணித்து அநுபவிக்கத் தக்கது. அது போலத்தான் அழுகைச் சுவையும் பிறவும், தந்தை அவர்கட்கு மதிப்பு தந்து, அவரது கருத்தை ஒப்புக்கொள்ள முடியவில்லை.
  3. சங்க இலக்கியங்கள் உள்ளன. அவற்றில் ஒரு சில வடசொற்களே உள்ளன; அவ்வளவே. பெரும்பாலானவற்றை அச்சுக்குக் கொணர்ந்தவர் உ.வே.சா. இவர் தமிழ்ப் பார்ப்பனர், நம்மவர்; பெரியார் போலவே மதிக்கத் தக்கவர். போற்றற்குரியவர்.