பக்கம்:தந்தை பெரியார் சிந்தனைகள்.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மொழிபற்றிய சிந்தனைகள்

169



பெரிதும் சேர்ந்ததாகும். அப்பப்பா! நாயக்கரின் அழகுப் பிரசங்கத்தை, ஆணித்தரமான சொற்களை, அணிஅணியாய் அலங்காரம் செய்யும் உவமானங்களை, உபகதைகளை, அவரது கொச்சைவார்த்தை உச்சரிப்பை, அவரது வர்ணனையை, உடல் துடிப்பைப் பார்க்கவும் கேட்கவும், வெகுதூரத்திலிருந்து மக்கள் வண்டுகள் மொய்ப்பது போல வந்து மொய்ப்பார்கள். அவர் இயற்கையின் புதல்வர்! மண்ணை மணந்த மணாளர்! மண்ணோடு மண்ணாய் உழலும் மாந்தர்களுக்கு நாயக்கரின் பிரசங்கம் ஆகாயகங்கையின் பிரவாகம் என்பதில் சந்தேகம் இல்லை. செய்யவேண்டும் என்று தோன்றியதைப்போல, தமிழ் நாட்டில் வேறு எவரிடமும் காணப்பெறுவதில்லை. தமிழ் நாட்டின் வருங்காலப் பெருமைக்கு நாயக்கர் அவர்கள் முன்னோடும் பிள்ளை; தூதுவன்.”

-வ.ரா. 1933-இல் ‘காந்தி’ இதழில் எழுதியது.

(19) “சாதாரணமாக இராமசாமியாருடைய பிரசங்கங்கள் மூன்று மணிநேரத்திற்குக் குறைவது கிடையாது. இந்த அம்சத்தில் தென்னாட்டு இராமசாமியார் வடநாட்டுப் பண்டித மாளவியாவை ஒத்தவராவார். ஆனால் இருவருக்கும் ஒரு பெரிய வித்தியாசம் உண்டு. பண்டிதரின் பிரசங்கத்தை அரைமணி நேரத்திற்குமேல் என்னால் உட்கார்ந்து கேட்கமுடியாது. .. இராமசாமியார் தமது பேச்சை எவ்வளவுதான் நீட்டினாலும் அவருடைய பேச்சில் அலுப்புத் தோன்றுவதே இல்லை. அவ்வளவு ஏன்? தமிழ் நாட்டில் இராமசாமியாரின் பிரசங்கம் ஒன்றுமட்டும்தான் என்னால் மூன்று மணிநேரம் உட்கார்ந்து கேட்கமுடியும் என்று தயங்காமல் கூறுவேன்... அவர் உலக அநுபவம் என்னும் கலாசாலையில் முற்றுணர்ந்த பேராசிரியர் என்பதில் சந்தேகமில்லை. எங்கிருந்துதான் அவருக்கு அந்தப் பழமொழிகளும், உபமானங்களும், கதைகளும், கற்பனைகளும் கிடைக்கின்றனவோ நானறியேன்.

தாம் உபயோகிக்கும் கடும்சொற்கள் எல்லாம் செந்தமிழ்ச் சொற்கள்தாமாவென்று நாயக்கர் சிந்திப்பதில்லை. எழுவாய் பயனில்லைகள், ஒருமை பன்மைகள், வேற்றுமையுருபுகள் முதலியவை பற்றியும் கவலைப்படுவதில்லை. ஆனால் தாம் சொல்லிவரும் விஷயங்களை மக்களின் மனத்தைக் கவரும் முறையில் சொல்லும் வித்தையை அவர் நன்கறிவார். அவர் கூறும் உதாரணங்களின் சிறப்பையோ சொல்லவேண்டுவதில்லை.

இராமசாமியாரின் பிரசங்கம் பாமரமக்களுக்கே உரியது என்று சிலர் சொல்லக் கேட்டிருக்கின்றேன். பாமரமக்களை