பக்கம்:தந்தை பெரியார் சிந்தனைகள்.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

170

தந்தை பெரியார் சிந்தனைகள்



வசப்படுத்தும் ஆற்றல், தமிழ் நாட்டில் வேறெவரையும்விட அவருக்கு அதிகம் உண்டு என்பதில் சந்தேகமில்லை. ஆனால் இதிலிருந்து அவருடைய பிரசங்கம் படித்தவர்களுக்குச் சுவைக்காது என்று முடிவு செய்தல் பெருந்தவறாகும். என்னைப் போன்ற அரைகுறைப் படிப்பாளர்களேயன்றி.[குறிப்பு 1] முழுதும் படித்துத் தேர்ந்த பி.ஏ., எம்.ஏ., பட்டதாரிகளும் கூட அவருடைய பிரசங்கங்களைக் கேட்டு மகிழ்ந்திருக்கிறார்கள். அவருடைய விவாதத் திறமை அபாரமானது. “இவர் மட்டும் வக்கீலாக வந்திருந்தால் நாமெல்லாம் ஓடு எடுத்துக்கொள்ள வேண்டியது தான்” என்று ஒரு பிரபல வக்கீல் மற்றொரு வக்கீல் நண்பரிடம் கூறியதை நான் ஒரு சமயம் கேட்டதுண்டு... உபயோகமற்ற வாதங்களும் அவர் வாயில் உயிர்பெற்று விளங்கும். இதற்கு ஓர் உதாரணம்; அந்தக் காலத்தில் நாயக்கர் அவர்கள் மாறுதல் வேண்டாதவராக விளங்கியபோது, சட்டசபைப் பிரவேசிதத்துக்கு விரோதமாகப் பலபிரசங்கள் புரிந்தார். அப்போது அவர் கூறியவாதங்களில் ஒன்று சட்டசபைப்பிரவேசத்தினால் வீண் பணச்செலவு நேரும் என்பது.

“ஒரு ஜில்லாவில் சுமார் 30,000 வாக்காளர்கள் இருப்பார்கள். அபேட்சகராக நிற்பவர் இவர்களுக்கு 30,000 ‘கார்டாவது’ போட வேண்டும். தபால் துறைக்கு இதனால் நல்ல வருவாய். இத்துடன் போதாது. இந்த அபேட்சகர் இறந்து விட்டதாக எதிர் அபேட்சகர் ஒருவதந்தியைக் கிளப்பிவிடுவார். “நான் இறக்கவில்லை உயிருடன்தான் இருக்கிறேன்” என்று மறுபடியும் 30,000 கார்டு போடவேண்டும்”.

நாயக்கரின் இந்த வாதத்தில் அர்த்தமே இல்லை என்று சொல்லவேண்டுவதில்லை.[குறிப்பு 2] அதுவும் எழுத்தில் பார்க்கும்போது வெறும் குதர்க்கமாகவே காணப்படுகிறது. ஆனால் அப்போது நாயக்கரவர்கள் கூறும்போது நானும் இன்னும் 4,000 மக்களும்


  1. இப்படிக் கூறுவது ‘கல்கி’யின் இயல்பான அடக்கம். படித்தவர்கள் இவரை மிஞ்சமுடியாது. அவர்தம் புதினங்கள்கூட நல்லத்தமிழில் அமைந்துள்ளன. தாமஸ் ஹார்டியின் புதினங்களை நிகர்த்தவை அவர்தம் புதினங்கள்.
  2. ஆங்கில அறிஞர் டாக்டர் ஜான்சன் வாதம் புரிவதில் சில சமயம் வாதம் தவறாக முடியும்போது விதண்டாவாதத்தில் இறங்குவார். அவர் வரலாற்றை எழுதும் ஆசிரியர் கூறுவார்: “if his pistol misses fire, he would knock at its butt’s end” இதை அய்யா அவர்களின் விதண்டாவாதத்துடன் ஒப்பிட்டு மகிழலாம்.