பக்கம்:தந்தை பெரியார் சிந்தனைகள்.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மொழிபற்றிய சிந்தனைகள்

173



பள்ளி, கல்லூரிக் கல்வித்திட்டத்தில் இந்தி இடம் பெறக்கூடாது என்று தந்தையவர்கள் பேச்சாலும் எழுத்தாலும் கையாண்ட எதிர்ப்புபற்றி விவரங்களுடன் விளக்கப்பெற்றது. இந்தித் திணிப்புபற்றிப் பெரியார் அவர்களின் சிந்தனைகள் காட்டப்பெற்றன. தமிழ்மொழியாராய்ச்சியில் தமிழே கேரளம், கர்நாடகம், ஆந்திரம் என்ற இடங்களில் பேசப்பெற்றது என்றும் இடவகையால் தமிழின் பெயரே மலையாளம், கன்னடம் தெலுங்கு என்பதாக வழங்கப்பெற்றது என்பது பெரியாரின் கருத்தாகும் என்றும், இது ஆராயத்தக்கது என்றும் காட்டப்பெற்றது. எழுத்துச்சீர்த்திருத்தமே தந்தையவர்கள் தமிழ் எழுத்துவடிவ மாற்றத்தில் பெரும்பங்காகும் என்பது காட்டப்பெற்றது. இதுபற்றிய பெரியாரின் சிந்தனைகள் விவரம் விளக்கப்பெற்றது. அறிஞர் குழந்தைசாமியின் கருத்தும் தரப் பெற்றது. தமிழ்ப்புலவர்கள்பற்றி பெரியாருக்கு நல்ல அபிப்ராயம் இல்லை என்பதையும் காட்டினேன். இதுபற்றி என் கருத்தையும் உங்கள் முன் வைத்தேன்.

இலக்கியம்பற்றி அய்யா அவர்கள் கம்பராமாயணம், சீவசிந்தாமணி, சிலப்பதிகாரம் போன்றவற்றை ஒதுக்குவது உகந்ததாக இல்லையென்றும், பன்னெடுங்காலமாக தமிழர்களின் மரபுச்செல்வமாக வந்தவற்றை ஒதுக்கித்தள்ளுவது அறிவுடையன அல்ல என்றும்; கம்பராமாயணத்தை ‘காமத்துப்பால்’ என்று சொல்லுவது பொருத்தமன்று என்றும் இலக்கியங்களில் வரும் நிகழ்ச்சிகள் சுவையின்பாற்படும் என்றும் விளக்கினேன். சுவை இலக்கணத்தின்பால் அய்யா அவர்கள் தனிக் கருத்தினைச் செலுத்தவில்லை என்பது என் கருத்து என்று குறிப்பிட்டேன். திருக்குறளை விரிவாகப் போற்றும் அய்யா அவர்கள் சிலம்பு, சிந்தாமணி, மேகலை போன்ற காவியங்களை வெறுப்பது விரும்பத்தக்கதன்று என்றும் குறிப்பிட்டேன். இங்ஙனமாக இன்றைய பொழிவு அமைந்தது.

கடந்த பல்லாண்டுகளாக சைவம், வைணவம், சமணம், பெளத்தம் போன்ற சமயங்களையும் இறைவனை அடிப்படையாகக் கொண்ட பக்தி இலக்கியங்களையும் படித்தும் ஆய்ந்து எழுதியும் வந்த அடியேனுக்கு இறைமறுப்புக் கொள்கையே தமது குறிக்கோளாக்க கொண்ட தந்தை பெரியார் சிந்தனைகளைப் பேச வாய்ப்பு அளித்த டாக்டர் இரா. தாண்டவனுக்கும், பல்கலைக்கழகத்தினருக்கும் குறிப்பாகப் பெரியார் கொள்கையின் சார்பாக உள்ள துணைவேந்தர் டாக்டர் பொன். கோதண்டராமன் அவர்கட்கும் என் அன்பு கலந்த நன்றி என்றும் உரியது.