பக்கம்:தந்தை பெரியார் சிந்தனைகள்.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

174

தந்தை பெரியார் சிந்தனைகள்



எண்பத்தைந்து அகவையைக் கடக்கும் நிலையிலுள்ள அடியேன் என்னுடைய கல்லூரி வாழ்க்கையில் (ஐந்து ஆண்டுகள்) தந்தையாரின் பேச்சை விருப்புடன் கேட்டவன்; அதன்பிறகு அவர் மறையும் வரையில் நெருங்கிப் பழகியவன். இந்த நீண்டகால அநுபவத்தில் என் மனம் தெளிவான நிலையில் உள்ளது; அநுபூதி நிலையை எட்டும் நிலையில் உள்ளது. இப்போது அடியேனுக்கு இராமாநுசர், இராமலிங்க அடிகள், தாயுமான அடிகள், இராமகிருஷ்ண பரமஹம்சர், நால்வர்களில் குறிப்பாக நாவுக்கரசர், மணிவாசகர் ஆகியோருடன் தந்தை பெரியார் அவர்களும் சேர்கின்றார் என்பது என் கருத்து. அப்பர் சுவாமிகள், வள்ளலார் இவர்கள் படைப்பில் பெரியார் கருத்துகளைக் காணலாம். அண்மையில் திரு இராம. வீரப்பன் (எம்.ஜி.ஆர்.கழகத் தலைவர்) ‘வள்ளலார் மென்மையாகச் சொன்னவற்றையே பெரியார் வன்மையாகச் சொன்னார்’ என்று கூறியது போன்ற கருத்தைக் கொண்டவன் அடியேன். இராமாநுசர் வாழ்வையும் தந்தை பெரியார் வாழ்வையும் இருவர்தம் கருத்துகளையும் ஒரு சேரவைத்து ஒப்பிடுங்கால் இருவரும் மானிட இனத்தின் மேம்பாட்டுக்காகப் பணியாற்றிய பெரியார்கள் என்பது எனக்குத் தெளிவாகின்றது. ஆகவே இராமநுசரே பெரியாராகப் பிறந்துள்ளாரோ- மறுஅவதாரமோ என்று நினைக்கத்தோன்றுகிறது. பெரியாரும் தம் இறைமறுப்புக் கொள்கைமூலம் உருவமற்ற பரம்பொருளைக் (Transcendent Universal Reality) கண்டவர் என்பதாக எனக்குப் புலப்படுகின்றது. மக்கள் வழங்கும் கடவுளைப்பற்றிக் குறை கூறினாரேயன்றி தாம் மனத்தில் கொண்டுள்ள கடவுளைப்பற்றிக் குறிப்பிட்டுப் பேசவில்லை. அவர் அநுபூதி நிலையில் இருந்ததாகவே எனக்குத் தோன்றுகிறது.