பக்கம்:தந்தை பெரியார் சிந்தனைகள்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விட்டார். துறையூருக்குத் திரும்பியதும் பெரியாரின் ஈரோட்டு முகவரிக்குக் கடிதம் எழுதினேன். ஒருவாரத்தில் விதிகளின் நகலைப் பதிவு அஞ்சலில் அனுப்பி வைத்து உதவினார். இங்கனம் எத்தனையோ முறைகளில் தந்தை பெரியாரின் உதவிகள் பெற்றுப் பள்ளி வளர்ச்சியில் பயன்பெற்றேன்.

(ii) மூன்று சுவையான நிகழ்ச்சிகள்: தந்தை பெரியாரை நினைக்கும் போது மூன்று சுவையான நிகழ்ச்சிகள் நினைவிற்கு வருகின்றன.

(அ) ஒரு சமயம் பெரியார் வாழ்வில் நிகழ்ந்த 'மிதியடி வரலாறு' பற்றிக் கேட்டேன். ஒரு சமயம் அவர் திறந்த மகிழ்வுந்தில் சென்று கொண்டிருந்தபொழுது அவர்மீது அவருக்குப் பிடிக்காத ஒருவன் ஒரு மிதியடியை வீசினான். அஃது அவர் மடியின்மீது விழுந்தது. அவர் அதை எடுத்து நோக்கியபோது அது புதியதாக இருந்தது. வண்டியோட்டியிடம் ‘வண்டியைத் திருப்பு; மற்றொன்று சாலையில் கிடக்கும்; அதை எடுத்து வரலாம்! அது ஒருவருக்கும் பயன்படாது; இது நமக்கும் பயன்படாது. இரண்டும் நம் கைக்குக் கிட்டினால் நமது அலுவலகத்தில் யாராவது பயன்படுத்திக் கொள்ளலாம்’ என்று கூறி சாலையில் கிடந்த மிதியடியை எடுத்து வந்தார்.

தந்தை பெரியாரைப் பார்த்து ‘செருப்பு உங்கள்மீதுப் பட்டும் கோபம் வரவில்லையே ஏன்?’ என்று கேட்டேன். அதற்கவர் ‘தம்பி, பொதுத்தொண்டில் இருப்பவர்கட்கு இது போன்றவை அடிக்கடி நிகழக்கூடியவை. படித்தவனாக இருந்தால் கூட்டத்தில் மறுத்துப் பேசுவான்; அல்லது செய்தித்தாளில் மறுப்பு தெரிவிப்பான். இவன் படிக்காத முட்டாள். இவன் தன் எதிர்ப்பைச் செருப்புமூலம் காட்டினான். இதில் கோபப் படுவதற்கு என்ன இருக்கின்றது?’ என்று அமைதியாகக் கூறினார் ‘பெரியார், பெரியாரே’ என்பது என் அறியா மதிக்குத் தெளிவாயிற்று.

(ஆ) பிறிதொரு சமயம்: தந்தை பெரியாரிடம் “ஆத்திகர் ‘கடவுள் உண்டு’ என்கின்றார்கள். தாங்கள் ‘கடவுள் இல்லை’ என்கிறீர்கள். அவர்கள் ஏதோ ஒரு பொருளை நினைத்து உண்டு என்கிறார்கள். அவர்கள் பேச்சில் உண்டு என்பதன் எழுவாய் ‘கடவுள்’ நீங்கள் ‘இல்லை’ என்கிறீர்கள்? எந்தப் பொருளை நினைத்து இல்லை என்கிறீர்கள்?” என்று வினவினேன். அவர் சிறிதுசிந்தித்து ‘ஒன்றும் தெரியவில்லையே. கிழவனை மடக்கி விட்டீர்களே’ என்று சொல்லிச் சிரித்தார். ‘நான் சொல்லட்டுமா?’ என்றேன். ‘சொல்லுங்கள்’ என்றார். ‘அய்யா, அவர்கள்