பக்கம்:தந்தை பெரியார் சிந்தனைகள்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கடவுள் சமயம்பற்றிய சிந்தனைகள்

7



மூட நம்பிக்கைக்கு மூலாதாரம் கடவுள் என்பது அவர்கருத்தாதலால் இறைமறுப்புக் கொள்கை அவரது பேச்சாகவும் அமைகின்றது; மூச்சாகவும் இருந்து வந்தது. அவர்தம் வாழ்நாளெல்லாம் இறைமறுப்புக் கொள்கையை நிலை நிறுத்துவதற்காக ஆயிரக்கணக்கான கூட்டங்களில் பேசிவந்தார்; குடியரசு இதழ்களில் 'சித்திரபுத்திரன்' என்ற புனைபெயரால் நூற்றுக்கணக்கான கட்டுரைகள் எழுதிவந்தார்.


பள்ளிக்கல்வி, கல்லூரிக் கல்வி போன்ற வாய்ப்புகள் தந்தை பெரியார் அவர்கட்குக் கிட்டாதது மனித குலத்திற்கு ஒரு மாபெரும் நன்மையாக வாய்ந்தது என்று கருதுவதற்கு இடமுண்டு. அதனால்தான் அய்யா அவர்கள் 'பகுத்தறிவுப் பகலவனாகத்' திகழ முடிந்தது. கல்விச்சாலையில் படித்திருந்தால் மனிதகுலம் சேமித்து வைத்திருக்கும் மரபுரிமை (Heritage) அவர் மனத்தில் திணிக்கப்பெற்றிருக்கும். அதனை மேலும் மேலும் வளர்த்துக் கொண்டு ஒரு பெரும் புலவராகவோ, நாட்டமிருந்தால் ஒரு மாபெருங்கவிஞராகவோ வளர்ந்திருப்பார். ஏதாவது ஓர் அலுவலை மேற்கொண்டு பாவேந்தர் சொல்வது போல,

தன்பெண்டு தன்பிள்ளை சோறு வீடு
சம்பாத்யம் இவையுண்டு தானுண் டென்பேன்
சின்னதொரு கடுகுபோல் உள்ளங்கொண்டு
தெருவார்க்கும் பயனற்ற சிறிய வீணனாகப்[குறிப்பு 1]

போயிருப்பார். இரசிகமணி டி.கே.சி. அவர்களும் பள்ளி கல்லூரிக் கல்வியைப் பற்றிக் குறைவான எண்ணங்கொண்டவர். அங்கு ஆசிரியர்கள் மாணாக்கனின் புதுப்போக்குடமையை (orginality)க் கொன்றுவிடுவர் என்ற கருத்துடையவர். இதில் ஓரளவு உண்மை உண்டு என்பதைக் கல்வித்துறையில் நீண்டகாலம் பணியாற்றி வந்த பட்டறிவால் அறிவேன்.


பகுத்தறிவுப் பகலவனானதலால் மனம் பொது நலத்தை நாடியது; இராமானுசருக்கு மனிதகுலத்தின்மீது இருந்த அக்கறையைப்போல், பாவேந்தர் சொல்லுகிறபடி,

தூயஉள்ளம் அன்புள்ளம் பெரியஉள்ளம்,
தொல்லுலக மக்களெலாம் ஒன்றே என்னும்
தாயுள்ளார்.[குறிப்பு 2]

கொண்டார். அதில் தனி இன்பமும் கண்டார். தன் வாழ்வையெல்லாம் மனிதகுல மேம்பாட்டுக்காகவே அர்ப்பணித்து


  1. பாரதிதாசன் கவிதைகள்-உலக ஒற்றுமை. அடி (1-4)
  2. மேலது-அடி (13-15)