பக்கம்:தந்தை பெரியார் சிந்தனைகள்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சேர்ந்து அளிக்கின்றன. பார்வதி சமேதராகிய பரமசிவனது விநோதனமான குடும்பத்தினின்று நாம் பெறும் பாடம் இதுவே. இத்துடன் இது நிற்க.

இன்னொரு விதமாக நோக்குவோம். சைவம் இறைவனைப் 'பதி' என்று பேசும். பதிக்கு சிறப்பியல்பு, பொது இயல்பு என்ற இரண்டு இயல்புகள் உண்டு. இயல்பு-இலக்கணம். சிறப்பியல்பைச் சொரூப (தன் இயல்பு) இலக்கணம் என்றும், பொது இயல்பைத் தடத்த இலக்கணம் என்றும் வழங்குவர் சித்தாந்திகள். தடத்தம்-அயலிலுள்ள பொருட்கண் இருப்பது. பிறிதொரு பொருளின் சார்பினால் மாறுபடாத தன்மையுடைய பதியிடம் றிதொன்றை நோக்காது தன்னையே நோக்கி நிற்கும் நிலையில் காணப்பெறும் இயல்புகளே பதியின் சொரூப இலக்கணம் ஆகும். பதி உலகத்தை நோக்கி நிற்கும் நிலையில் காணப்பெறும் இயல்புகள் தடத்த இலக்கணம் ஆகும். உயிர்களும் ‘உலகம்’ என்பதனுள் அடங்கும்.

(அ) பதியின் சொருப இலக்கணம்: இது குணம் குறிகளைக் கடந்த நிலை. பதி ஒன்றே; அதாவது அஃது ஏகமாய் இருக்கும் எல்லாவற்றிற்கும் மேலானது; அது காணப்படும் உருவம் அற்றது; காலம் இடம் இவற்றால் அளவுபடுத்தப் பெறாதது; குணங்களும் இல்லை; அடையாளங்களும் இல்லை; மலமற்றது; என்றும் அழியாதிருப்பது; ஆன்மாக்களுக்கு அறிவாய் நிற்பது; சலிப்பற்றது; அளவுபடாததால் போக்குவராகிய அசைவு இல்லாதது. காட்சிக்கும் கருத்திற்கும் அப்பாற்பட்டது. இந்நிலையை,

குணம்இ லான்குணம் குறிஇலான்
குறைவிலான் கொடிதாம்
புலம்இ லான்தனக் கென்னஓர்
பற்றிலான் பொருந்தும்
இலம்இ லான்மைந்தர் மனைவிஇல்
லான்னவன்? அவன்சஞ்
சலம்இ லான், முத்தி தரும்பர
சிவன் எனத் தகுமே [1]

என்ற தாயுமான அடிகளின் திருப்பாடல் விளக்குவதைக் காணலாம்.

(ஆ) பதியின் தடத்த இலக்கணம்: இது குறிகுணங்களோடு கூடிய நிலை. தன்னையே நோக்கி நிற்கும் ‘பரசிவம்’ அந்நிலையினின்றும் உலகத்தை நோக்குங்கால் தனது


  1. தா.பா. ஆசையெனும்-30