பக்கம்:தந்தை பெரியார் சிந்தனைகள்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

12

தந்தை பெரியார் சிந்தனைகள்


சிறப்பியல்புகளில் ஒன்றான பெருங்கருணை காரணமாக உயிர்களின் பொருட்டுத் தானே தனது விருப்பத்தால் தனது ஆற்றலை (சக்தியை) கொண்டு பல்வேறு நிலைகளையுடையதாக இருக்கும். இந்நிலைகளே பதியின் தடத்த இலக்கணமாகும்.

இதனால் சொரூப நிலையில் பதி 'சிவம்' என்றும், தடத்த நிலையில் 'சக்தி' என்றும் பேசப்படும். சொரூபநிலையில் சக்தி செயற்படாது அடங்கி இருக்குங்கால் பதி 'சிவம்' என ஒன்றேயாக இருக்கும். உலகில் சிலர் பல்வேறு பணிகளில் ஈடுபட்டுக் களைத்துப் போய் படுக்கும் போது ‘சிவனே என்று கிடக்கின்றேன்’ என்று சொல்லுவதில் இக்கருத்து அடங்கியிருத்தல் காணப்படுவதை அறியலாம். சக்தி செயற்படும் நிலையில், சிவம் அதனோடு அச்செயலையெல்லாம் உடன் இயைந்து இயற்றி நிற்றலால் 'சிவமும் சக்தியும்' அம்மை அப்பனாய்- மாதொருபாகனாய்- தையல் பாகனாய்- இரண்டாய்த் தோற்றம் அளிக்கும்.

தடத்த நிலையில் பதி சக்தியினால் பலநிலைகளையுடையது. இந்த நிலையில் அதற்கு உருவம் உண்டு; தொழில் உண்டு; அவற்றிற்கேற்ற பலப்பல பெயர்களும் உண்டு. ஆயினும், இவையனைத்தும் இறைவனின் அருள் காரணமாக உண்மையால் கொண்டனவேயன்றி வெறும் கற்பனையல்ல என்பது ஈண்டு அறியப்பெறும். சொரூப இலக்கணம் எப்படி உண்மையோ, அப்படியே தடத்த இலக்கணமும் உண்மையாகும்.

(இ) தடத்தநிலையில் சிவற்றைக் காட்டுதல் பொருத்தமாகும். சொரூப நிலையில் பதி 'பரசிவம்' என நிற்குங்கால் அதன் சக்தி 'பராசக்தி' என வழங்கப்பெறும். அஃது உயிர்களின் அறிவை நோக்கி நிற்கும் அறிவு வடிவமானது. அந்த அறிவே சக்தியின் சொரூபம். பாரதியாரின் சக்தி வழிபாடெல்லாம் இந்தச் சக்தியை நோக்கியேயாகும் என்று கருதுவதில் தவறில்லை. மேலும்,

சித்தத்தி லேநின்று சேர்வ துணரும்
சிவசக்தி தன்புகழ் செப்பு கின்றோம்;
இத்தரை மீதினில் இன்பங்கள் யாவும்
எமக்குத் தெரிந்திடல் வேண்டுமென்றே.[1]

என்ற தாழிசையிலும் இந்த நிலையினைக் காணலாம்.

பதி உலகத்தை நோக்குங்கால் மேற்குறிப்பிட்ட பராசக்தியின் ஒரு சிறு கூறு உலகத்தைத் தொழிபட முற்படும். அதனை 'ஆதி


  1. மேலது-வையமுழுதும்-5