பக்கம்:தந்தை பெரியார் சிந்தனைகள்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கடவுள் சமயம்பற்றிய சிந்தனைகள்

27


கேட்காமல் விட்டிருந்தால் மைல்கற்கள், ஃபர்லாங் கற்கள் எல்லாம் கடவுளர்களாகி இருக்கும். அம்மிக்கல்லையும் நிறுத்தி வைத்துக் குங்குமம் மஞ்சள் பூசிவிட்டால் அதுவும் ஒரு கடவுளாகக் காட்சியளிக்கும் என்கின்றார்.

(7) கடவுளைக் கற்பித்தவனை மன்னித்துவிடலாம். ஏனெனில் அவன் மடையன். அறிவில்லாத காரணத்தால் கற்பிக்க வேண்டியவனானான். கடவுளைக் கற்பித்தவன் “உலக உற்பத்திக்கு அது நடைபெறுதற்கு ஒரு கர்த்தா இருக்க வேண்டும். அந்தக் கர்த்தாதான் கடவுள்” என்று ஒரு சந்தேகத்தின்மீது உறுதிபடுத்திச் சொல்லுகிறான். அதாவது சந்தேகத்தின் பயனைக் (Benefit of doubt) கடவுளுக்குக் கொடுக்கிறான்.

(8) சைவன் வீட்டில் பிறந்தால் சிவன் கடவுள். வைணவன் வீட்டில் பிறந்தால் விஷ்ணு கடவுள். இஸ்லாமியன் வீட்டில் பிறந்தால் அல்லா கடவுள். கிறித்தவன் வீட்டில் பிறந்தால் கிறித்து கடவுள். நாத்திகன் வீட்டில் பிறந்தால் யார் கடவுள்? எனவே கடவுள் என்பது தற்செயலாக ஏற்பட்டதேயன்றி இயற்கையாக ஏற்பட்டது அன்று என்கின்றார்.

(9) பார்ப்பான் நினைத்தபடி எல்லாம் கடவுளர்கள் தோன்றியபடி உள்ளார்கள். மனிதக் கடவுள்; மாட்டுக் கடவுள்; குரங்குக்கடவுள்; பட்சிக் கடவுள்; பலதலைகளுள்ள, பல கைகளுள்ள கடவுள்; ஏன் இவை? எல்லாம் வல்ல, எங்கும் நிறைந்த யாவையுமான கடவுள் என்கின்றபோது ஏன் இத்தனைக் கடவுளர்கள்? என வினவுகின்றார் அய்யா அவர்கள்.

(10) பிறப்பு இறப்பு இல்லாதவன் கடவுள் என்ற பிறகு தாய் வயிற்றில் பிறந்தவன் கடவுள் ஆக முடியுமா? இராமன், கிருட்டிணன் அப்படிப் பிறந்தவர்கள்தாமே? ஒரு கடவுளுக்குத் தாய், தகப்பன் ஏற்பட்டால் அந்தத் தாய் தகப்பன்களான கடவுளர்களுக்கும் தாய் தகப்பன் ஏற்பட்டுத்தானே தீரும்? இவற்றை நோக்கும்போது கடவுளர்கள் தாமாக ஏற்பட்டவர்கள் என்பதை எப்படி ஒப்புக்கொள்ள முடியும்?

(11) நமக்கெல்லாம் கடவுள் எது என்றால் புராணங்களில் வரும் பாத்திரங்களே. தத்துவப்படியான கடவுள் நமக்கு இல்லை.

(12) கடவுளை உண்டாக்கியவனை முட்டாள் என்கின்றார். ஏன் என்றால் அவன் எந்தக் காரணமுமின்றித் தன்னுடைய பயத்தையும் அறிவற்ற தன்மையையும் கொண்டு இயற்கையாக ஏற்படுபவைகளை அவை ஏற்பட ஏதோ ஒரு காரணம் இருக்க வேண்டும் என்பதற்காகக் கடவுளைக் கற்பித்தான். அறிவாளியால் உண்டாக்கப் பெற்றிருந்தால் காரண காரியங்கள் இருக்கும்;