பக்கம்:தந்தை பெரியார் சிந்தனைகள்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

(2) கடவுள் ஒருவர் உண்டு என்று சொல்லிக்கொண்டு எடுத்தற்கெல்லாம் அவர்மீது பழிபோட்டுக்கொண்டு திரிகின்றவன் முழுமூடன்; அடிமுட்டாள் என்பது அய்யாவின் கருத்து.

(3) கடவுள் மனிதன் மூலமாகவே தன்னுடைய ஆட்சியை நடத்துகின்றார் என்பதே பெரும்பாலான ஆத்திகர்களின் முடிவு. இதனாலேயே பிச்சை பெற்றவனும் கடவுள் கொடுத்தார் என்று சொல்லுகின்றான். உத்தியோகம் பெற்றவனும் கடவுள் கொடுத்தார் என்று செப்புகின்றான். பிறரிடம் உதவி பெற்றவனும் கடவுள் கொடுத்தார் என்று கூறுகின்றான். ஏதாவது ஒரு நெருக்கடியில் விபத்து நேராமல் தப்பித்துக் கொண்டவனும் கடவுள் காப்பாற்றினார் என்று மொழிகின்றான். இந்நிலையில் எந்த நன்மைக்கும் தீமைக்கும் மனிதன்மீது பொறுப்பைச் சுமத்துவது எப்படி முடியும்? என்பது பெரியார் நம்முன் வைக்கும் வினா?

(4) சிறையிலிருக்கும் கைதிகூட கடவுளைப் பிரார்த்திக்கின்றான். கொள்ளையடிக்கும் கறுப்புச் சந்தைக்காரனும், சதா கடவுளை வணங்குகிறான். திருட்டுத்தொழில் புரிகிறவனும், திருடப்போகும்போது கடவுளை நினைத்துக் கொண்டுதான் செல்லுகின்றான். தன்னைச் சாமியார் என்றும், கடவுளின் சீடன் என்றும் சொல்லிக்கொள்கின்றவன் மடியில் சாராயப்புட்டியும் பிராந்தி பாட்டிலும் உள்ளன. பூசை அறையில் சாராயம் காய்ச்சும் செயலும் வேசியுடன் இன்பலீலைகளும் நடைபெறுகின்றன. இங்ஙனம் எந்தத் தொழிலைச் செய்கின்றவனாயிருந்தாலும் அவனவன் கடவுளை வணங்கியே செயல்படுகின்றான். ஆனால் இவனது தகாத செயல் வெளிப்பட்டுச் சிக்கிக் கொண்டால் 'அட கடவுளே' என்று அப்பொழுதும் கடவுள் பக்தியுடன் நடந்து கொள்வதாக நடிக்கின்றான். இத்தனை பேர்களிலும் தன்னைக் கடவுள் நம்பிக்கையற்றவன் என்று ஒருவனாவது கூறிக் கொள்வதில்லை.

(5) கடவுள் கொடுக்கிறார் என்று கூறிக்கொண்டு கடவுளை வணங்குவது வெறும் வேடம்; முட்டாள்தனம் ஆகும் என்பது பெரியார் கருத்து. முதலாளி என்பவன் மூட்டை அடிக்கிறான்; அவர் கடவுள் கொடுத்தார் என்று கூறி மக்கள் தன்மேல் ஆத்திரப்படாமல் இருக்கக் கடவுளை வணங்குகின்றான். தொழிலாளிக்கு நாளை சோற்றுக்கு வழி இல்லை. அவனுக்குக் கடவுள் பக்தி இருந்தும் சோற்றுக்கு வழி இல்லாதவனாக இருக்கின்றான். புளிச்சேப்பக்காரனுக்கு மேலும் மேலும் பணம்.