பக்கம்:தந்தை பெரியார் சிந்தனைகள்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கடவுள் சமயம்பற்றிய சிந்தனைகள்

33


ஏன் பயந்து கொண்டு இருக்க வேண்டும்? சர்வசக்தியுள்ள கடவுள் என்று சொல்லி உற்பத்தி செய்துவிட்டு அது நமக்கு விளங்கும்படி செய்யாவிட்டால் அஃது எப்படி சர்வசக்தி உடையதாகும்? இந்த வினாக்களுக்கு எந்த ஆத்திகனும் மறுமொழி தரமுடியாது.

(10) கடவுளும் மதமும் அறிவற்றவனைத் தான் ஆட்டும் என்பதோடு நம்பிக்கைக்காரனை வெறியனாகவும் பைத்தியக் காரனாகவும்கூட ஆக்கிவிடும். ஆனால் எப்படிப்பட்ட தன்மையுள்ள கடவுளும் மதமும் பகுத்தறிவுவாதி இருக்கிற பக்கம் எட்டிக்கூடப் பார்க்கமுடியாது.

இப்படிச் செல்கின்றன அய்யா அவர்களின் சிந்தனைகள்.

உருவவழிபாடு: மணிவாசகப்பெருமான் கடவுளுக்கு உருவம் இல்லை, பெயர் இல்லை என்று கூறியதையும்; சித்தர்கள் உருவவழிபாட்டைக் கடிவதையும் முன்னர் குறிப்பிட்டேன். அவற்றை நினைவு கூர்ந்த நிலையில் தந்தை பெரியாரின் இதுபற்றிய கருத்துகளைக் கவனிப்போம். கல்லைக் கடவுள் என்று வழிபடும் மக்கள் பார்ப்பனரைச் 'சுவாமி' என்று குறிப்பிடுவதைக் காண்பதில் வியப்பில்லை என்கின்றார். அண்மைக்காலத்தில் கேரள சபரிமலை ஐயப்பன் பெரும்புகழ் பெற்றுள்ளான். ஆண்டு தோறும் எண்ணற்ற தமிழர்கள்-பெரும்பாலும் தொழிலாளர்கள், அலுவலர்கள் போய் வருகின்றனர். அவர்கள் ஒருவரை யொருவர் வினவும் போது 'சுவாமி' என்று விளிக்கின்றனர்.[குறிப்பு 1]

(1) கடவுள் உருவமில்லாதவர், நிறம் இல்லாதவர், குணம் இல்லாதவர், எவர் கண்ணுக்கும் படாதவர், யாராலும் உணரமுடியாதவர், ஐம்புலன்கட்கும் அப்பாற்பட்டவர் என்று ஒருபக்கம் சொல்லிக் கொண்டு இன்னொருப்பக்கம் கழுதை, குதிரை, மாடு, களிமண், சாணி உருண்டை, குரங்கு, பல்லி, செம்பு, பித்தளை, கல், மரம், பாம்புப் புற்று, காக்காய், கழுகு ஆகியவற்றை மக்கள் வழிபடுகின்றனர். இஃது அறியாமை, வடிகட்டின முட்டாள்தனம் அல்லவா? என்று கேட்கின்றார் பெரியார்.

(2) கடவுளைப் பற்றிச் சொல்லுகின்றவர்கள் “கடவுள் பற்றற்றவர்; கருணையுள்ளவர், அன்பானவர், வேண்டுதல் வேண்டாமை இல்லாதவர், உருவமற்றவர், அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்திருப்பவர், ‘அவனன்றி ஒரணுவும் அசையாது’ என்றெல்லாம் சொல்லிவிட்டு, அதற்கு முற்றிலும் மாறான


  1. ஒருவன் உள்ளத்தில் அந்தர்யாமியாக இருக்கும் கடவுளை நினைத்து சுவாமி என்று குறிப்பிடுவதாக ஐதிகம்.