பக்கம்:தந்தை பெரியார் சிந்தனைகள்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34

தந்தை பெரியார் சிந்தனைகள்


தன்மையில் மனிதனைப்போல் உருவம் அமைத்ததோடு நில்லாமல் அதற்குப் பெண்டாட்டி, பிள்ளைக்குட்டி, வைப்பாட்டி என்றெல்லாம் கற்பித்துக் கொண்டு அவற்றிற்குச் சோறு, சாறு முதலியவற்றைப் படைக்கின்றாயே. இஃது அறிவுள்ளவர் செயலா?” என்று கேட்கின்றார்.

(3) அன்பு மயமான ஆண்டவனுக்கு அவன் திருக்கைகளில் அரிவாள், சூலம், வில், வேல் போன்ற பயங்கரமான ஆயுதங்கள் வைத்திருப்பதுபோல் உருவம் அமைக்கப்பெற்றுள்ளது. இஃது அன்புள்ளவருக்குப் பொருத்தமான செயலா? இப்படியெல்லாம் படைப்பது காட்டுமிராண்டித்தனமல்லவா? இவ்வாறு படைப்பவர்களை அடியார்கள் என்று சொல்வதற்கு என்ன அருகதை? “நான்பந்தயம் கட்டிச் சொல்லுகின்றேன்; நம் மக்களில் கடவுளை வணங்குகிறவர்களில் அறிவாளர்களோ யோக்கியரோ, உண்மை அறிந்தவரோ? இல்லை; இல்லை! இல்லவே இல்லை!” என்கின்றார் பகுத்தறிவுப் பகலவன்.

(4) திராவிடப் பொருளைச் சுரண்டுவதற்கு காரணமாயிருந்ததும், இன்றுவரை காரணமாய் இருந்து வருவதும் சிலை வணக்கமேயாகும். ஆரிய நச்சுமரத்திற்கு எருப்போட்டு நீர் ஊற்றி வருவது இந்தச் சிலை வணக்கமேயாகும்.

(5) சர்வ சக்தியிலுள்ள கடவுள் என்பதைச் சாதாரணச் சாணி உருண்டையாக ஆக்கிவைத்திருப்பது மாபெரும் அயோக்கியத்தனம்; ஆட்டுக்கல்லாக அடித்து வைத்திருப்பது அதைவிட பெரும் அயோக்கியத்தனம் என்கின்றார் பெரியார்.

(6) கடவுள் எங்கும் இருக்கிறார் என்றும் சொல்லி முடித்த பிறகு எதற்காகக் கோயில் கட்டி அதற்குள் குழவிக்கல்லைக் கொண்டுபோய் வைத்து ‘இதுதான் கடவுள்’ என்று ஏன் சொல்ல வேண்டும்? உருவம் இல்லாதவர் கடவுள் என்று கூறிவிட்டு கடவுளுக்கு நான்கு கைகள், 12 கைகள் என்றும் இரண்டு தலை, ஆறு தலை என்றும் எதற்காகப் படைக்க வேண்டும்?

(7) கடவுள் எக்காலத்தும் என்றும் நிறைந்து நிற்கும் சக்தியாகச் சொல்லப் பெறுகிறது. அப்படிப் பார்த்தால் இராமன் எப்படிக் கடவுளாக முடியும்? கிருட்டிணன், கந்தன், விநாயகன் இப்படியாகச் சொல்லப்பெறுபவைகள் அனைத்தும் எப்படிக் கடவுளர்களாக முடியும்? இவர்கள் எல்லாம் பிறந்திறந்து போயுள்ளனர். சராசரிமனிதர்களின் குணம் படைத்தவர்களாக உள்ளனர். இவர்களை எப்படிக் கடவுளர்களாக ஒத்துக் கொள்ள முடியும்? என்று வினவுகின்றார்.