பக்கம்:தந்தை பெரியார் சிந்தனைகள்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36

தந்தை பெரியார் சிந்தனைகள்


விடுவதால் விலைவாசி சொல்ல முடியாத அளவுக்கு உயர்ந்து விடுகின்றது. இங்குக் கடவுளர்கள் கயவர்களின் இழிசெயல்கட்குத் துணை போவதைக் காண்கின்றோம். கோயில் வருமானத்தைக் கொண்டு பக்தியை அளவிடுவது எவ்வளவு கேவலம் என்பது அறிவுள்ளவர்கட்குத் தெளிவாகின்றது.

(4) கடவுளர்களைப் பற்றிச் சொல்லப் பெறுகின்ற இலக்கணம், இலட்சியம் இவற்றிற்குச் சிறிதும் பொருந்தாத அயோத்தி இராமன் எப்படிக் கடவுளாக முடியும்! கோகுலத்தில் வளர்ந்த கண்ணன், பழநி, திருச்செந்தூர் போன்ற கோயில்களில் எழுந்தருளியுள்ள கந்தன் ஆகியோர் எப்படிக் கடவுளர்களாக முடியும்? என்று கேட்கிறார்கள் அய்யா அவர்கள். மனிதகுலம் படைத்த இவர்களை எப்படிக் கடவுளாக ஒத்துக் கொள்ள முடியும்?

(5) தமிழன் வணங்கும் கோயில்கள் ஆயிரக்கணக்கானவை. ஒரு மனிதன் ஒரு கடவுளுக்குமேல் வழிபடுகின்றான், நம்புகின்றான் என்றால் அவன் கடவுளை நம்புகின்றவன் ஆகான் என்பதுதானே பொருள்? அவன் கடவுளுக்கு உருவம் உண்டு என்று சொல்வானேயானால் அவன் கடவுளைப் பற்றிச் சரியாகத் தெரிந்து கொள்ளாதவன் என்று தானே கொள்ள வேண்டும்? இங்குத் தந்தை பெரியாரின் வினாக்கள் தத்துவத்தின் அடிப்படையில் அமைந்திருப்பதைக் காண்கின்றோம்.

(6) "கோயிலுக்குப் போகக்கூடாது; செத்தாலும் போகக்கூடாது. அங்கே என்ன இருக்கின்றது. குழவிக்கல்லைத் தவிர? யாராவது சொல்லுங்கள்” என்று சவால் விடுக்கும் தந்தை பெரியார், “எல்லா இடங்களிலும் எங்கும் நிறைந்த கடவுளுக்கு தனியான ஓர் இடத்தில் என்ன வேலை? எல்லாமாய் இருக்கின்ற இறைவனுக்கு குழவிக்கல்லாய் இருக்க வேண்டும் என்று என்ன தலை எழுத்து? எவனாவது சாபம் கொடுத்தானா?” என்று கிண்டல் பாவனையில் தொடுக்கும் வினாக்களுக்கு எந்த அடியாராவது பதில் சொல்ல முடியுமா?

(7) ஒரு கோயிலுக்குள் பூசைக்குரிய பலசிலைகள் உள்ளன. அவற்றுள் சில கருவறைக்குள் உள்ளன; சில அந்த அறைக்கு வெளியே உள்ளன. இரண்டு வகைகளும் கடவுளர்களே; சாத்திரப்படி குடமுழுக்கு செய்யப்பெற்றவையே. வெளியிலிருக்கும் கடவுளர்களைத் தொடலாம்; தொட்டுக் கண்ணில் ஒற்றிக் கொள்ளலாம். கருவறைக்குள் இருக்கும் கடவுளை மாத்திரம் நெருங்கக் கூடாது என்றால் இதில் யோக்கியமிருக்கிறதா? என்று வினவுகின்றார் தந்தை பெரியார்.