பக்கம்:தந்தை பெரியார் சிந்தனைகள்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42

தந்தை பெரியார் சிந்தனைகள்


(9) பெரியார் சொல்லுவார்: “இந்த ஊர்க் கோயிலை நீங்கள்தான் கட்டினீர்கள். கல்தச்சருக்குக் காசு கொடுத்துக் குழவிக் கல்லை அடித்து வைக்கச் சொன்னீர்கள். சாமி பூசைக்கு மானியம் விட்டீர்கள். இவ்வளவும் பண்ணி விட்டு நீ கோயிலின் வெளியிலிருந்து கன்னத்தில் போட்டுக் கொள்ளுகிறாயே! நீ இழிசாதி, நீ தொட்டால் சாமி தீட்டாகிவிடும். சாமி செத்துவிடும்” என்கின்றான். இதை பொறுத்துக் கொண்டுதானே சாமி கும்பிடுகிறாய். இப்படிநீ தொட்டால் தீட்டாகிவிடும். செத்துவிடும் என்கிற கடவுளை நீ கும்பிடலாமா?-என்று கேட்கின்றார்.

(10) மனிதன் இழிவுக்கு, மானமற்ற தன்மைக்கு, பகுத்தறிவற்ற தன்மைக்கு, கடவுள் நம்பிக்கை காரணமாக இருப்பதால் அதை ஒழித்துக் கட்டவேண்டும் என்கின்றோமே தவிர கடவுள்மேல் எங்களுக்கு எந்தவிதக் கோபமும் இல்லை-என்கின்றார். இக்கருத்து நீண்ட ஆய்வுக்கு உட்படுத்தப்பெறல் வேண்டும்.


2. சமயம்

இவ்வுலகம் தோன்றியநாள் தொட்டு மக்களிடையே ஏதோ ஒருவகையில் சமயம் நிலவி வருகின்றது. மக்கள் அன்றாட வாழ்க்கை ஒழுங்கு பெறவிருக்கும் நன்னெறிகளின் தொகுதியே சமயம் ஆகும். நம் நாட்டில் நிலவும் சமயங்கள்; சைவம், வைணவம், புத்தம், சமணம் என்பவையாகும். நடைமுறையிலுள்ள மதம் அல்லது சமயத்தைப் பற்றிப் பெரியார் கூறுவது.

(1) நம்மீது ஆதிக்கம் செலுத்த ஏற்படுத்திக் கொண்டிருக்கும் சூழ்ச்சி என்னும் கட்டடம் மதம் என்னும் சிமெண்ட் (சீமைக்காரை) சுண்ணாம்பினால், கடவுள் என்னும் கற்களைக் கொண்டு என்றும் அழியாத மாதிரியில் பலமாகக் கட்டி, அதைச் சாத்திரம் புராணம், மறுபிறவி, சொர்க்கம், மோட்சம் என்னும் அழகான சித்திர வேலைகளுடன் பூசப் பெற்றுள்ளது-என்று விளக்குவார்.

(2) மதம், கடவுள், சாத்திரம் மனிதச் சமுதாயத்தை முறைப்படுத்தவும் ஒழுக்கம், நாணயம் முதலியவற்றை வளரச் செய்யவும் ஏற்படுத்தப் பெற்றிருக்க வேண்டும். ஆனால் நாளடையில் இது (மதம்) ஒருசில சுயநலசோம்பேறிகளிடம் அகப்பட்டுக் கொண்டு, இன்றைக்கு அதற்கு நேர்மாறாக நாணயமற்ற தன்மையும் தீயொழுக்கமும் அயோக்கியத்தனமும்தான் வளருகின்றன. மதம் ஆஷாடபூதிகள், போலி வேடதாரிகள் நிறைந்ததாக மாறிவிட்டது என்று கருதுகின்றார் அய்யா.