பக்கம்:தந்தை பெரியார் சிந்தனைகள்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

46

தந்தை பெரியார் சிந்தனைகள்


வாழ்க்கைக்காரருக்குத் திரையாகவே மதமும் பக்தியும் உதவுகின்றன. இன்றைய வாழ்க்கையில் பல போலித்துறவிகள் வழக்கில் சிக்கிக் கொண்டிருப்பதைக் காண்கின்றோம். இதனை நினைந்தே வள்ளுவப் பெருந்தகை,

வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்
புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று (குறள்-273)

என்று கூறிப் போந்தார்.

(8) மதங்கள் பிரிவினைக்கும் பேதத்திற்கும் காரண மாத்திரமல்லாமல் மடமைக்கும் மூடநம்பிக்கைக்கும் காரணமாக உள்ளன. அச்சத்தின் அத்திவாரத்தின்மீது ஆண்டவன் இருப்பது போல, மூடநம்பிக்கை மடமை என்ற அத்திவாரத்தின்மீதே மதங்கள் இருக்கின்றன.

(9) மதம் மனித சமுக முற்போக்கைத் தடைசெய்வதுடன் மனித சமூக ஒற்றுமைக்கும் சுதந்திரத்திற்கும் சம உரிமைக்கும் இடையூறாய் உள்ளது.

(10) ஓரிரு கோடிருபாய் பணமும் ஓரிரு ஆயிரம் ஆட்களும் 5-6 மொழிகளில் செய்தித்தாள்களும் வைத்துக்கொண்டு ஓர் ஈன மிருகத்திற்கும் தெய்வத்தன்மை கற்பித்து அற்புத அதிசயங்கள் செய்ததாகக் கதைகட்டி விட்டுப் பிரச்சாரம் செய்தால் ஓர் ஆண்டுக்குள்ளேயே பல இலட்சக்கணக்கில் மக்கள் மண்டியிட்டுப் பின்பற்றும் புதிய மதத்தைக் காணலாம்.

இந்தப் போக்கில் அய்யா அவர்களின் சிந்தனைகள் அமைகின்றன.

(அ) மதவாதிகளின் கொடுமை: மதவாதிகளின் கொடுமைகளைப் பற்றிய அய்யா அவர்களின் சிந்தனைகள் இவை:

(1) மதத்தின் ஆதிக்கத்தில் கட்டுண்டு இருப்பவர்கட்கு ஆவேசமும் வெறியும் உண்டாவதுதான் முக்கிய பலனாக இருக்கின்றதேயன்றி, அது சிரமப்படுகின்ற, ஒரு பாவமும் அறியாத பாமரமக்களுக்குக் காரியத்தில் என்ன நன்மை செய்துள்ளது? மதத்தால் மக்களுக்கு என்ன ஒழுக்கம் ஏற்பட்டுள்ளது? இந்த வினாக்களுக்கு மறுமொழி என்ன கூறமுடியும்? ஏதாவது இருந்தால்தானே சொல்ல முடியும்? வேண்டுமானால் இவை மதத்துரோகமான வினாக்கள் என்று கூறித் தட்டிக் கழிக்கலாம்.

(2) குரு, பாதிரி, முல்லா, புரோகிதர்கள் என்கின்ற கூட்டத்தார்கள், அரசர்கள், செல்வர்கள், சோம்பேறிகள் ஆகியவர்கள் உரிமம் (License) பெற்ற காலிகளேயாவர்கள்.