பக்கம்:தந்தை பெரியார் சிந்தனைகள்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

52

தந்தை பெரியார் சிந்தனைகள்


யிருக்க வேண்டும். வழிபாட்டுக்குத் திருமாமணிமண்டபம் வந்து நித்திய சூரியர்களுடனும் முத்தர்களுடனும் வாழ்ந்து கொண்டிருக்க வேண்டும் என்று என் சிறுமனம் எண்ணுகின்றது.

ஓரிடத்தில் “நான் நாத்திகன் அல்லன்; தாராள மனமுடையவன்; நான் பகுத்தறிவு வாதி” என்றும் (இரண்டாம் பொழிவு -பக்.56) மனிதன் இழிவுக்கும் மானமற்ற தன்மைக்கும் கடவுள் நம்பிக்கை காரணமாக இருந்தால் அதை ஒழித்துக் கட்டவேண்டும் என்கின்றோமே தவிர கடவுள்மேல் எங்களுக்கு எந்தவிதக் கோபமும் இல்லை” என்றும் (முதற்பொழிவு-பக் 4), கூறுவனவே இதற்கு அரணாக அமைகின்றன.

‘'மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர்'’
‘'தம்புகழ் நிறிஇத் தாமாய்ந்த'’ (புறம்-165)

பெரியாருள்-ஒருபெரும் பெரியாராக-'தந்தை பெரியாராக'-நம்மனோர் உள்ளத்தில் நிலையான இடம் பெற்று வாழ்ந்து கொண்டிருக்கின்றார்.

‘'உள்ளத்தால் பொய்யா தொழுகின் உலகத்தார்'’
‘'உள்ளத்துள் எல்லாம் உளன்'’ (குறள்-294)

முடிவுரை: இன்றைய பொழிவில் தந்தை பெரியாரைப் பாவேந்தர் அறிமுகத்தைக் காட்டினேன். அடியேனுக்கும் தந்தை பெரியாருக்கும் 1934 முதல் அப்பெருமகனாரின் பூதவுடல் மறையும் வரையிலும் இந்தத் தொடர்பு இருந்தது என்று கூறினேன்.

பெரும்பாலும் தந்தைபெரியாரின் சிந்தனைகள் மறுக்கும் பாங்கில் அமைந்திருப்பதால் அவர் ஒருவாறு மறுக்கும் சைவ வைணவ கடவுளர்களையும் அவர்தம் உருவங்களையும் முன் வைத்தால்தான் அவர்தம் மறுப்பின் போக்கு தெளிவாகும் என்று கருதியே சைவசமயத்திலுள்ள கடவுளர்களின் வடிவங்கள் பற்றியும் வைணவ சமயத்தில் உள்ள இறைவனுடைய ஐந்து நிலைகளையும் எடுத்துக் காட்டினேன்.

பெரியாரின் சிந்தனைகளுக்கு வரும்போது கடவுள், அவர் பற்றிய நம்பிக்கை, கடவுள் எல்லாம் வல்லவர், கடவுளர்களின் உருவங்கள், திருக்கோயில்கள், கடவுள் மறுப்பு, கடவுள் ஒழிப்பு ஆகியவைபற்றிய சிந்தனைகளையும் உங்கள் முன் வைத்தேன்.

அடுத்து சமயம் என்ற தலைப்பில் சமயம் பற்றியும், சமயக் கேடுகள், சமயவாதிகளின் கொடுமை சமய ஒழிப்புபற்றிய சிந்தனைகளையும் எடுத்துக் காட்டினேன்.