பக்கம்:தந்தை பெரியார் சிந்தனைகள்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமூகம்பற்றிய சிந்தனைகள்

57


சிற்றுார்கள் கூட ஏதோ ஒருவகையில் அவர்தம் கொள்கைகளின் தாக்கம் இருந்து வருகின்றது.

பெரியார் கூறுவார்: “நரக வாழ்வாயிருந்தாலும் அங்கு நான் மனிதனாக மதிக்கப்படுவேனாகில் அவ்வாழ்வே இப்பூலோக வாழ்வைவிட மேலென்று கருதுவேன். நரகவாழ்வு மட்டுமல்ல; அதைவிடப் பலகொடிய கஷ்டங்களை அனுபவிக்க நேரும் இடமானாலும் அவ்விடத்தில நான் மனிதனாக மதிக்கப் பெறுவேன் என்றால் அவ்வாழ்வே இவ்விழிச்சாதி வாழ்வை விட சுகமான வாழ்வு என்று கருதுவேன்”

சாதி ஒழிய வேண்டும் என்பது என்னுடைய கருத்து. சிறுவயது முதல் சாதி ஒழிய வேண்டும் என்பதில் கருத்துக் கொண்டவன் நான். நாற்பதாண்டுக் காலமாகச் சாதி ஒழிய வேண்டும், மதம் ஒழியவேண்டும், மநுதர்ம வர்ணாசிரமம் ஒழிய வேண்டும், சாத்திரம் ஒழிய வேண்டும் என்று சொல்லியும் எழுதியும் வந்தவன். முப்பத்தைந்து ஆண்டுக்காலமாக பார்ப்பானும் ஒழிய வேண்டும் என்ற உண்மைக் கருத்தை நன்றாக உணர்ந்து அதற்குமுன்னைவிட இன்னும் அதிகத் தீவிரமான முறையில் பாடுபட்டுக் கொண்டுவருகின்றேன்.

எனது நாற்பதாண்டுக் கால உழைப்பின் பயன் இன்று ஒரளவுக்கும் பலன் அளித்து வருகிறது. எல்லா வாய்ப்புகளும் நன்மைகளும் ஒருசாதிக்கே ஒருசாராருக்கே என்ற நிலை மாறி எல்லா நன்மைகளும் எல்லோருக்கும் உண்டு என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

சாதி ஒழியவேண்டுமானால் - இந்தக் கடவுள், மதம், சாத்திரம், புராணம் ஒழியவேண்டும், ஒழிக்கப்பட வேண்டும் என்று கூறினேன். சும்மா வெறுமனே வாயால் சொல்லவில்லை. கடவுள் ஒழிய வேண்டும் என்ற நான் பிள்ளையாரைப் போட்டு நடுத்தெருவில் உடைத்தேன். இராமர் படத்தைச் செருப்பால் அடித்தேன்; தீயிட்டுக் கொளுத்தினேன். இராமாயணம், கீதை, மநுதர்மம் போன்ற சாத்திரங்களை நெருப்பில் போட்டுப் பொசுக்கினேன்; அரசாங்கம் ஒழிய வேண்டும் என்று கூறிச் சிறை சென்றேன்.

சாதியை ஒழிக்கிறேன் என்றால் அது மேல் சாதிக்காரன்மேல் வெறுப்பு என்றும், வகுப்பு வாதம் என்றும் சொல்கிறான். நான் ஏன் வகுப்புவாதி? எந்த ஒரு பார்ப்பன சேரிக்காவது தீ வைத்து, எந்த ஒரு பார்ப்பனக் குஞ்சுக்காவது தீங்கு விளைவித்திருக்கிறோமோ? சாதி இருக்கக் கூடாது என்று கூறினதால் அதை வகுப்பு துவேஷம் என்றால் என்ன நியாயம்?