பக்கம்:தந்தை பெரியார் சிந்தனைகள்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

58

தந்தை பெரியார் சிந்தனைகள்


எனக்கு வந்த மந்திரிப் பதவி ஆளுனர் பதவி எல்லாம் உதறித் தள்ளிவிட்டு நாற்பது ஆண்டுகளாக கடவுள் சாதி ஒழிப்புக்காகப் பாடுபட்டு வருகின்றேன். இதற்கு என்னபலன் கிடைத்தது என்றால், நான் சொல்வதை மக்கள் கேட்கிறார்கள். அடித்து நொறுக்காமல் மரியாதை செய்கிறார்கள். காலைத் தொட்டுக் கூடக் கும்பிடுகிறார்கள்; அவ்வளவுதான். பார்ப்பான் சொல்கிறான். கடைசிக் குழவிக் கல்(சாமி) இருக்கிறவரை இந்த இராமசாமி நாயக்கனாகட்டும் வேறு எவனாகட்டும். எங்களை ஒன்றும் அசைக்க முடியாது என்று கூறும் அளவுக்கு நம்பிக்கை இருக்கிறது அவனுக்கு.

எங்களூர் வாய்க்காலில் நான்கு படித்துறைகள்; பார்ப்பானுக்கு ஒன்று, அவனுக்கொன்று, இவனுக்கொன்று என்று இருந்தன. அதையெல்லாம் ஒன்றாக்கினேன்.”

இந்த அளவில் தந்தை பெரியார் அவர்களைக் காட்டினேன். அவர் உள்ளத்தின் நிலையை அவர் வாக்காலேயே தெளிவாக்கினேன். இனி சமூகம்பற்றிய, அவர் சிந்தனைகளைப் பொருத்தமான பலதலைப்புகளில் உங்கள்முன் வைக்கின்றேன்.


1. ஆட்சிமுறை.

இதுபற்றித் தந்தை பெரியார் அவர்களின் சிந்தனைகளைக் காண்போம்.

(1) ஆட்சிமுறை என்பது யார் நம்மை ஆள்வது என்கின்ற விஷயமல்ல. நமது மக்களுக்கு எந்த மாதிரி அரசியல் முறை இருக்க வேண்டும் என்பதுதான் முக்கியமாகக் கருதப்பெற வேண்டியது.

(2) "ஓர் இணைச்செருப்பு 14 ஆண்டுக்காலம் இந்த நாட்டை ஆண்டதாக உள்ள கதையை மிகுந்த விசுவாசத்தோடு படிக்கும் மக்களுக்கு மனிதனே அல்லாமல் இழிவான மிருகம், நாய், கழுதை, ஆண்டால்கூட அஃது அதிகமான அவமானம் என்றோ குறை என்றோ நான் சொல்லவரவில்லை. ஆனால் மனிதனானாலும் கழுதையானாலும் எந்தக் கொள்கையோடு எந்த முறையோடு ஆட்சி புரிகின்றது? அதனால் பொது மக்களுக்கு என்ன பலன் என்பதுதான் எனது கவலை” என்கின்றார்.

(3) மக்களை வருணசிரமத் தர்ம முறைக்கும், காட்டு மிராண்டிக் காலத்துக்கும் கொண்டு போகாமல் இருக்கும்படியானதும் அறிவு உலகத்திற்கு இட்டுச் செல்வதுமான ஆட்சி யாருடையதானாலும், அப்படிப் பட்ட ஆட்சி வேண்டுமென்று தான் போராடுகின்றோம்.