பக்கம்:தந்தை பெரியார் சிந்தனைகள்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



ஆனால் தந்தை பெரியார் இந்த விதைகளை விதைப்பதற்குச் சந்தித்த எதிர்ப்புகள், நெருக்கடிகள், ஏளனங்கள், ஏசல்கள் இவைகளையெல்லாம் தாங்கிக் கொண்டு எதிர்த்து இக்கருத்துக்களை விதைப்பதற்குரிய வலிமையை தமிழ் மண்ணில் தந்தை பெரியார் மாத்திரமே பெற்றிருந்தார். அதனால்தான் ‘பெரியார்’ என்று புகழப்பட்டார். ‘செயற்கரிய செய்வர் பெரியார்’ என்று போற்றப்பட்டார்.

எனவேதான், தந்தை பெரியாருடைய கருத்துக்களை, சிந்தனைகளை எடுத்து ஆய்வு செய்வதென்பதிலேயே பல சிக்கல்கள் தோன்றுவது இயல்பு. ஆனால் பெரியவர் பேராசிரியர் சுப்புரெட்டியார் அவர்கள் மிக அருமையாக இந்த ஆய்வினை நிறைவேற்றியிருக்கிறார்.

ஏனெனில் பேராசிரியர் டாக்டர் சுப்புரெட்டியார் அவர்கள் ஆழ்ந்த தமிழறிவு படைத்தவர். விஞ்ஞான நூல்களைக் கற்றவர். தொன்மை எது, பழமை எது என்று பேதத்தைப் புரிந்தவர். தத்துவங்கள் சில நேரங்களில் நடைமுறை உண்மையோடு மோதுகின்ற சூழல்களை உணர்ந்தவர். பண்பாடு, நாகரிகம், கலை, கலாச்சாரம், இலக்கியம், அறிவியல் என்ற பல பெயர்களாலே அழைக்கப்படுகிற செயற்பாடுகளின் ஒட்டுமொத்தக் கலவைதான் மனித வாழ்க்கை என்பதிலே நம்பிக்கை உள்ளவர்- பற்றுள்ளவர். இவைகளுக்கிடையே சமரசம் காண வேண்டும் என்று கருதுபவர்.

ஆனால் தந்தை பெரியார் மனித வாழ்க்கைக்கு, முன்னேற்றத்திற்கு தடை என்று தோன்றுகிற எல்லாவற்றையுமே தகர்த்தெறிய வேண்டும் என்று எண்ணுகிறவர்.

இந்தச் சிந்தனை முரண்பாடுகளுக்கிடையில் தந்தை பெரியார் சிந்தனைகளைப் பற்றி ஒரு அற்புதமான ஆய்வை, பயனுள்ள ஆய்வை தமிழ் மக்களுக்குத் தெரிவிக்க வேண்டிய கருத்துக்களை மிகச் சிறப்பாக வழங்கியிருக்கிறார்.

பேராசிரியர் சுப்புரெட்டியார் அவர்களுடைய ஆழ்ந்த அறிவும், நீண்ட அனுபவமும், மிகுந்த பொறுப்புணர்வும் தமிழ் மக்களுக்குப் பயனளிக்கக் கூடிய இந்த நூலை உருவாக்கத் துணை நின்றிருக்கிறது. இந்தச் சிறந்த பணிக்காக என்னுடைய வணக்கத்தையும், நல்வாழ்த்துக்களையும் தெரிவிக்கக் கடமைப்பட்டிருக்கிறேன்.

வாழ்க பேராசிரியர் சுப்புரெட்டியார், வளர்க அவருடைய அறிவிலக்கிய ஆய்வு என்று மீண்டும் வாழ்த்துகிறேன்.

- இராம. வீரப்பன்
VI