பக்கம்:தந்தை பெரியார் சிந்தனைகள்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

62

தந்தை பெரியார் சிந்தனைகள்


என்பதாக இருக்க வேண்டுமே தவிரத் திருமணம் என்றால் ஆண் வீட்டாருக்குச் சம்பளம் இல்லாமல் வெறும் சோற்றுச் செலவோடு மட்டுமே ஒரு வேலைக்கு ஆள் (பெண்) சம்பாதிப்பதாக இருக்கக்கூடாது.

(2) ஆணும் பெண்ணும் கூடி வாழ்வதுதான் வாழ்க்கை. வாழ்க்கை நடத்த ஆணும் பெண்ணும் - உற்ற துணைவர்கள் ஆவார்கள் என்பதைக் குறிப்பதுதான் ‘வாழ்க்கைத் துணை’ என்பதாகும். வாழ்க்கை என்பது சுதந்திர இன்பவாழ்க்கையே ஒழியக் கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட துன்ப வாழ்க்கையல்ல.

(3) திருமணமானவள் என்பதைக் குறிப்பதாகப் பெண்ணுக்குத் தாலி கட்டப் பெறுகின்றது. திருமணம் ஆனவன் என்பதைச் சுட்ட ஆணுக்கு எந்தவித அடையாளமும் இல்லை. இது தவறு. ஆண்பெண் இருவரும் சமம் என்பதற்கு இருவர் கழுத்திலும் ஒருவருக்கொருவர் தாலிகட்டிக் கொள்ள வேண்டும். இல்லையேல் இருவருக்கும் தாலி இல்லாமல் இருக்க வேண்டும். மோதிரம் மாற்றிக் கொள்ளும் முறையை மேற்கொள்ளலாம்.

(4) தாலி என்பது நாய்க்கு நகராண்மைக்கழகம் கட்டும் பட்டை போன்றது. தாலி பெண்ணை ஆண் அடக்கியாளும் மூர்க்கத்தனத்தின் சின்னம். பெண்களுக்கு அறிவு வந்தா லொழியத் தாலியை நீக்க முடியாது.

(5) சீர்த்திருத்தத் திருமணங்களிலும் 100க்கு 90 திருமணங்களில் இந்த அடிமைச் சின்னமாகிய தாலி கட்டும் பழக்கம் இருந்து வருகின்றது. இந்நிலைமாற வேண்டும் என்கிறார் பெரியார்.

(6) கல்யாணம் என்பதற்கு ‘வாழ்த்து' என்பது பொருள். அது வாழ்க்கைத்துணை என்ற பொருளில் இல்லை. ஏதோ கறுப்பு ஆட்டை 'வெள்ளாடு' என்பது போலவும், கொடிய நஞ்சுள்ள நாகத்தை 'நல்ல பாம்பு' என்பது போலவும் இப்படித் தப்பான சொற்களை அமைத்துக் கலியாணம், திருமணம் என்றெல்லாம் சொல்லி வருகின்றோம். ஆனால் பார்ப்பனர் மட்டும் சரியான சொற்களையே உபயோகித்து வருகின்றனர். அவை 'தாராமுகூர்த்தம்' 'கன்னிகாதானம்' என்பவை. ‘தானம்’ என்பது வடமொழிச்சொல். ‘தாராமுகூர்த்தம்’ என்பதிலும் இரண்டு சொற்களும் வடமொழிச் சொற்களே. தமிழர்க்கான காரியங்களில் வடமொழிச்சொல்லாக இருந்தால் அஃதொன்றினாலேயே அந்த முறை நமக்கில்லை என்று தெரிந்துவிடும். ஒரு பெண்ணைப் பெற்று வளர்த்து ஒருவனுக்குத் தாரைவார்ப்பது-தானம் தருவது என்பது கருத்து. நம் பழக்கப்படி ஆணும் பெண்ணும்