பக்கம்:தந்தை பெரியார் சிந்தனைகள்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமூகம்பற்றிய சிந்தனைகள்

65



காரர்கள் மாத்திரம் ஆரம்பித்து நடத்தி வருவதாகச் சொல்லிவிட முடியாது.

(2) உண்மையிலேயே கலப்புத் திருமணம் என்று கூற வேண்டுமானால் பார்ப்பனர், பார்ப்பனர் அல்லாதார் இருவருக்கும் நடைபெறும் திருமணம்தான் கலப்புத் திருமணம் என்று கூறவேண்டும். சாதிகளுக்குள் மிக உன்னத சாதி என்றும் கடவுளுக்கு அடுத்த அந்தஸ்து உடைய சாதி என்றும் கூறப்பெறும் பார்ப்பனர் சாதிதான் தலை தூக்கிநிற்கிறது. பார்ப்பனர் அல்லாத சூத்திரர் சாதி என்று சொல்லப் பெறுகின்ற சாதிதான் சமுதாயத்தில் மிகவும் கீழானது என்றும் நிலைநாட்டப் பெற்றுள்ளது. இந்த வேற்றுமை ஒழியவேண்டும். இந்த இரண்டு சாதிகளுக்கும் திருமணம் நடைபெறுவதைத்தான் ‘கலப்புத் திருமணம்’ என்று கூறலாம்.

தம்பதிகளுக்கு அய்யாவின் அறிவுரை: இதுவும் சமுதாயத்திற்கு அய்யா அவர்கள் ஆற்றிய தொண்டு என்று கருதலாம். இத்திசையில் அவருடைய சிந்தனைகள்:

(1) மணமக்கள்- உயிர் நண்பர்கள். ஒருவருக்கொருவர் பழகும் முறையைப்போல் நடந்து கொள்ள வேண்டும். எதிலும் தான் கணவன் என்ற ஆணவம் மணமகன் கொள்ளக்கூடாது. மணமகளும் தான் கணவனுக்கு அடிமைப் பொருள்- அடுப்பூதுவதற்கே வந்தவள்-என்ற எண்ணமில்லாது பழகவேண்டும.

(2) மணமக்கள் பிள்ளைபெறுவதில் அவசரப்படக்கூடாது. திருமணம் நடந்து குறைந்தது மூன்று ஆண்டுகளுக்குப் பின்னாவது குழந்தை பெறுவதாயின் மிக நல்லதாகும்.

(3) மணமக்கள்-வாழ்க்கையில் மற்றவர்களுக்காக உதவும் மனப்பான்மையை உடையவராக இருக்கவேண்டும். நம்மால் நன்மை செய்ய இயலாவிட்டாலும் கேடாவது ஏற்படாதமாதிரி நடந்துகொள்ள வேண்டும். நல்வாழ்வும் நாணயமான வாழ்வும் பெறக் குழந்தைப்பேற்றைக் குறைத்துக் கொண்டு வாழ்க்கை வசதிகளை நல்ல வண்ணம் அமைத்துக்கொள்ள வேண்டும்.

(4) மணமக்கள்-தங்கள் வாழ்க்கையில் வரவுக்கேற்ற வகையில் செலவு செய்ய வேண்டும். கடன் வாங்கக் கூடாது. வரவு சிறிதாக இருப்பினும் அதிலும் ஒருகாசாவது மீதப்படுத்த வேண்டும். என்னைப் பொறுத்தவரையில் ஒழுக்கம் என்பது இதுதான் என்பேன். வரவுக்கு அதிகமாகச் செலவு செய்வது விபசாரித்தனம் என்பேன்.