பக்கம்:தந்தை பெரியார் சிந்தனைகள்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

66

தந்தை பெரியார் சிந்தனைகள்



(5) வாழ்க்கையில் தம்பதிகள் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துச் சிக்கனமாக வாழவேண்டும்.

(6) எந்தவிதமான சிரமம் வந்தாலும் மற்றவர்களிடமிருந்து உதவி பெறுவது என்ற எண்ணம் கொள்ளவே கூடாது. வெறுக்க வேண்டும். நாம் வாழவேண்டுமானால் மற்றவருக்கு உதவ வேண்டுமேயொழிய மற்றவர்களிடமிருந்து உதவியை எதிர் பார்க்கக் கூடாது.

(7) கணவன்-மனைவி என்பது இல்லை. ஒருவருக்கொருவர் துணைவர்கள்; கூட்டாளிகளே என்பதுதான் உண்மை. இதில் ஒருவருக்கொருவர் அடிமை-எசமான் என்பது இல்லை. இருவரும் சம அந்தஸ்துள்ளவர்கள் ஆவார்கள்.

(8) மணமகன் மணமகளைச் சிநேகிதராகவே கருதவேண்டும். அறிவை மழுங்க வைக்கும் கோயிலுக்குப் போவதும் உற்சவத்திற்குப் போவதும் கூடாது. வெளியேபோக வேண்டும், உல்லாசமாக இருக்க வேண்டும் என்றால் கண்காட்சிகள், ஆலைத்தொழிற்சாலைகள், அணைக்கட்டுகள், அருங்காட்சியகங்கள் முதலிய இடங்களைச் சென்று பார்க்க வேண்டும்.

(9) அறிவோடு சிக்கனமாக வாழவேண்டும். வரவிற்குமேல் செலவிட்டும் பிறர் கையை எதிர்ப்பார்ப்பதும், ஒழுக்கக்கேடான காரியங்களுக்கு இடங்கொடுப்பதுமான காரியங்கள் இன்றி வரவிற்குள் செலவிட்டுக் கவலையற்ற வாழ்வு வாழ வேண்டும்.

(10) மணமக்கள் இருவரும் நண்பர்களாக நடந்து கொள்ள வேண்டும். வாழ்க்கை அன்புருவாக இருக்க வேண்டும். மணமக்கள் தங்களுக்காகவே என்று இராமல் மற்றவர்க்காகவே வாழ்கின்றோம் என்று எண்ணவேண்டும்.

(இ) சீர்த்திருத்தத் திருமணம்: இதுபற்றியும் அய்யாவின் சிந்தனைகளை உங்கள் முன்வைக்கிறேன்:

(1) கல்யாணம் என்றால் சுதந்திர வாழ்க்கை, சமத்துவ வாழ்க்கை என்று இருக்க வேண்டுமேயொழிய அடிமை வாழ்க்கை, மேல் கீழ் வாழ்க்கை என்று இருக்கக்கூடாது என்பதே எங்களது ஆசை.

(2) ஆணும் பெண்ணும் பதிவு அலுவலகத்திற்குச் சென்று வாழ்க்கைத் துணையாகிவிட்டோம் என்று சொல்லிக் கையெழுத்தும் போட்டு விட்டால் போதும். அந்த வெறும் கையெழுத்துத் திருமணத்துக்கு இதைவிட (சுயமரியாதைத் திருமணத்தைவிட) அதிக மதிப்பும் நன்மையும் சுதந்திரமும் உண்டு.