பக்கம்:தந்தை பெரியார் சிந்தனைகள்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமூகம்பற்றிய சிந்தனைகள்

67



(3) பெண்கள் உலகம் முன்னேற்றம் அடையவேண்டுமானால், அவர்களுக்கும் மனிதத்தன்மை ஏற்படவேண்டுமானால், ஆண்களுக்கும் திருப்தியும், இன்பமும்; உண்மையான காதலும், ஒழுக்கமும் ஏற்படவேண்டுமானால் சீர்திருத்தக் கல்யாணத்துக்கு இடம் அளிக்கப்பெற வேண்டியது முக்கியமான காரியமாகும்.

(4) வேறு எந்தக் காரியங்களில் மாறுதல் இல்லாவிட்டாலும் இந்த வாழ்க்கைச் சுதந்திரத்தில் சம சுதந்திரம் ஏற்பட்டுத்தான் ஆகவேண்டும். சுயமரியாதை இயக்கத்தின், முதல் இலட்சியம் அதுவாகும். ஆதலால் அதுவிஷயத்தில் ஏற்படப்போகும் மாறுதலை மக்கள் வரவேற்றுத்தான் ஆகவேண்டும்.

(5) திருமணம் என்பது வயது வந்த அறிவு வந்த ஓர் ஆணுக்கும் பெண்ணுக்கும் சம்பந்தப்பட்ட காரியமேயொழிய மற்ற யாருக்கும்-வேறு எந்தக் கட்டுப்பாட்டுக்கும் சம்பந்தப்பட்ட தல்ல.

(6) இந்துமதப்பேரால், இந்துக்கடவுளர்களின் பேரால், அடிமையாக இருக்கும் இந்துப் பெண்களுடைய நன்மைக்குத் தான், அவர்களுக்கு சவுரியம் உண்டாகத்தான், அவர்களுடைய அடிமைத்ன்மையை ஒழிக்கத்தான்-இந்த மாதிரியான புரட்சிக்கரமான திருமணங்களை நாம் நடத்துகிறோம் என்பதை நமது பெண்கள் உணரவேண்டும்.

(7) நமக்கு மேலான மேல்சாதிக்காரன் என்பவனைப் (பார்ப்பானை), புரோகிதனை வைத்து நடத்தாத திருமணம் சுயமரியாதைத் திருமணம் ஆகும்.

(8) நமக்குப் புரியாததும், இன்ன அவசியத்திற்கு இன்னகாரியம் செய்கின்றோம் என்று அறிந்து கொள்ளாமலும் அறிய முடியாமலும் இருக்கும்படியானதுமான காரியங்களை (சடங்குகளை)ச் செய்யாமல் நடத்தும் திருமணம் பகுத்தறிவுத் திருமணம் ஆகும்.

(9) திருமணத்தில் சங்கீதம், நாட்டியம், காலட்சேபம் முதலியவைகளை மட்டும் ஏற்பாடு செய்யாமல் பல அறிஞர்களை அழைத்துக் கருத்துரை நிகழ்த்தவும், மக்கள் கேட்டுப் பயன் அடையவும் செய்து இருக்கிறார்கள். இதற்காக நாம் பாராட்ட வேண்டும்.

(10) மாறுதல் திருமணம் என்பது அடியோடு மூட நம்பிக்கையையும் தேவையற்றவைகளையும் விடுத்துப் பகுத்தறிவு அடிப்படையில் நிகழ்த்துவது என்பதாகும். திருமணம் என்பது மனிதனுக்குக் கவலையினை மாற்றத் தக்கதாக ஆகவேண்டும்.