பக்கம்:தந்தை பெரியார் சிந்தனைகள்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

70

தந்தை பெரியார் சிந்தனைகள்



அடிமை நிலையும் சொத்து வைத்திருக்க உரிமையற்ற நிலையும் இருக்க முடியாது. உலகிலுள்ள சகல கொடுமைகளிலும் விதவைக்கொடுமையே அதிகமானது.

(10) ‘விதவைத் திருமணம்’ என்கிற தொடர் நம்முடைய பெண்கள் விஷயத்தில்தான் சொல்லப்படுகிறது; ஆண்கள் விஷயத்தில் சொல்லப்பெறுவதில்லை. எப்படி இந்த அம்மை (திருமதி சொர்ணம்) ஒரு கணவனை மணந்து அவர் காலமான பின்பு எப்படி ஒருவரை மணந்து கொள்கிறார்களோ அது போலவே ஆண்மகன் ஒருவரும் ஒரு மனைவி தவறி இரண்டாவதாக ஒரு பெண்ணை மணந்துகொள்கிறார். இதனை ‘விதவன்’ திருமணம் என்று தானே போட வேண்டும்? ஏன் அப்படிச் செய்வதில்லை?

(11) இந்த உலகில் கணவனை இழந்த பெண்கள்தாம் அதிகம். மனைவியை இழந்த ஆண்கள் அதிகம் இல்லை. காரணம் மனைவியை இழந்தவன் மறுமணம் செய்து கொள்கிறான். ஆனால் கணவனை இழந்த பெண்களை மணக்க யாரும் முன்வருவதில்லை.

(12) விதவைத் தன்மை என்பது நமது நாட்டில் மிகக் கொடுமையான முறையில் இருந்து வருகிறது. இதனை எந்தச் சீர்திருத்தவாதியும் கவனிப்பது இல்லை. விதவைகளின் வாழ்க்கை ஒரு சிறைக்கூட வாழ்க்கையை ஒக்கும். ஒரு கைதிக்குள்ள நிர்பந்தம் ஒவ்வொரு விதவைக்கும் இருந்து வருகிறது. எப்படிக் கைதியானவன் சிறைக்கூட விதியை மீறவேண்டும் என்கிற ஆசைக்கும் அவசியத்திற்கும் உள்ளாகிறானோ அதுபோலவேதான் ஒவ்வொரு விதவையும் விதவைச்சட்டத்தை மீறவேண்டிய நிர்பந்தத்துக்கு ஆளாகிச் சிரமப்படுகிறாள். இந்தக் கொடுமை நிரபராதியான ஒரு பெண்ணுக்கு ஏன் ஏற்பட வேண்டும் என்று கேட்டால் இதற்கு என்ன மறுமொழி உள்ளது? இந்த 20-ஆம் நூற்றாண்டில் ‘தலை விதி’ என்றும் ‘கடவுள் செயல்’ என்றும் சொல்லி மக்களை எப்படி ஏய்க்க முடியும்?

(ஊ) குழந்தை மணம்: இதைப்பற்றியும் பெரியார் சிந்தித்துள்ளார். அவர் சிந்தனைகள்:

(1) குடும்ப வாழ்க்கையை நடத்துவதற்குத் தகுதியற்ற பருவத்தில் உள்ள சிறுமியர்களை மணம் என்னும் கயிற்றினால் பிணித்துக் குடும்பம் என்னும் குழியில் வீழ்த்திக் கணவன் என்னும் விலங்கனைய காவலாளி கையில் ஒப்புவிக்கும்படி எந்த அறநூலும் போதிக்கவில்லை.