பக்கம்:தந்தை பெரியார் சிந்தனைகள்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமூகம்பற்றிய சிந்தனைகள்

71



(2) சட்டத்தை மீறி நடக்கும் கல்யாணங்களில் சம்பந்தப்பட்ட வர்கள்மேல் வழக்குத் தொடுக்கும் உரிமை காவல்துறையினருக்கும் பொதுமக்களுக்கும் தாராளமாக இருக்க வேண்டும். ‘குடி குடியைக் கெடுக்கும்’ என்ற ஏட்டுச் சுரைக்காயைப்போல் ‘பெண்ணின் திருமண வயது 21’ என்று எல்லா இடங்களில் எழுதிவைப்பது நகைச்சுவை விருந்தேயன்றி வேறு என்ன?

(3) சாரதா சட்டத்தை மீறுவதான முறையில் மணம் நடைபெறப் போவதாகத் தெரிந்தால் அதைத் தடுக்கும் அதிகாரமும் அவ்வழக்கை விசாரிக்கும் அதிகாரமும் நீதிமன்றத்துக்கு இருக்கவேண்டும்.

(4) பெண்களுக்கும் ஆண்களுக்கும் திருமணம் செய்து வைத்து விடுவதால் சிறுவயதிலேயே அவர்கள் தலைமீது குடும்பப் பொறுப்பு விழுந்து விடுகின்ற காரணத்தால் சுதந்திரம் அற்றுக் கவலை, தொல்லை இவற்றிற்கு ஆளாகிப் போதிய வளர்ச்சியற்றவர்களாக ஆகிவிடுகிறார்கள்.

திருமண அடையாளம்: திருமணத்தில் தாலிகட்டப் பெறுகின்றது. இதுபற்றிப் பெரியார் சிந்தனைகள்:

(i) தாலிகட்டுவது என்பது பெண்களுக்குமட்டும் ஆண்கள் தாலிகட்டுவதால் அதில் ஏதோ காரணம் இருக்க வேண்டும், தாலிகட்டினவன் அப்பெண்ணுக்கு எசமான் என்றும் தாலி அடிமைச்சின்னம் என்றும் விளங்குகிறது. ஆண்பெண் இருவரும் சம அந்தஸ்து உள்ளவர்கள் என்பதற்கு இருவர்கழுத்திலும் தாலி கட்டிக்கொள்ளவேண்டும். இல்லையேல் இருவருக்கும் இல்லாமல் இருக்கவேண்டும் (மோதிரத்தை மாற்றிக் கொள்ளும் ஏற்பாடு செய்யலாம்).

(ii) தாலி என்பது நாய்க்கு நகராண்மைக்கழகம்கட்டும் பட்டை போன்றது. தாலி பெண்ணை அடக்கி ஆளும் மூர்க்கத் தனத்தின் சின்னம். தாலிபற்றிப் புலவர்கள் பேசும்போது காளையை அடக்குதல், புலிவேட்டையாடுதல் போன்ற பொருத்தமற்ற இலக்கிய ஆதாரங்களை அள்ளி வீசுவார்கள். பெண்களுக்கு அறிவு வந்தாலொழியத் தாலியை நீக்கமுடியாது.

(iii) தாலி கட்டுவது எதற்காக? அஃது எதற்காகப் பயன்படுவது என்றால் பெண்களை முண்டச்சியாக்கப் பயன்படுகின்றது. அறுப்பதற்காகவே பயன்படுகின்றது.

(iv) தாலி என்ற அடிமைச்சின்னம் சீர்த்திருத்தத் திருமணங் களிலும்- நூற்றுக்குத் தொண்ணுறு திருமணங்களில்கட்டப்பெறுகின்றது. இது மாறவேண்டும்.